இறையன்புவின் "சீற்றம்".. அதென்ன பச்சை கலரில்? ஸ்ட்டிரைட்டா இங்கே வருதே.. பெங்களூரு பறந்த லெட்டர்
சென்னை: கர்நாடக தலைமை செயலாளருக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்... இந்த கடிதம் குறித்த எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் அதிக அளவில் கலக்கப்படுகின்றன... இதனால் சுற்றுச் சூழல் வெகுவாக மாசடைகின்றன..
அதிகரித்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் நகரமயமாக்கலின் விளைவாக பெங்களூருவிலிருந்து இந்த கழிவுநீர் வெளியேறுகிறது.. அதாவது, 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேறுகிறது என்கிறார்கள்..

கழிவுநீர்: அந்த கழிவு நீரானது, பெங்களூருவின் மிகப்பெரிய ஏரியான வர்தூர் ஏரியில் கலந்து, சாக்கடைகளில் மலைபோல நுரை பொங்கிவிடுகிறது.. பிறகு, மீதமுள்ள கழிவு நீரானது, வர்தூர் ஏரியிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலந்து தமிழகத்துக்குள் நுழைகிறது.. தென்பெண்ணை ஆற்றில் கலந்து கொடி ஆழம் என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைகிறது... இந்த நீர் தான் தமிழ்நாட்டிற்கு வந்து பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர், மற்றும் விவசாய பாசனத்துக்கு பயன்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்: கடந்த சில மாதங்களாகவே அதிகப்படியான கழிவு நீர் சாக்கடைகளில் ஓடுவதால் ஆங்காங்கே நுரை மலைபோல குவிந்திருந்தது.. பிறகு வர்தூர் ஏரியில் கழிவு நீர் கலந்ததால் ஏரி பொங்க ஆரம்பித்துவிட்டது.. இதனால் சாக்கடைகளில் நுரை மலை உருவாகி சாலையில் தேங்கியதுடன், பல இடங்களில் வாகனங்கள் சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லும்போது, 'பெங்களூருவில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக பயன்படுத்துவது தொடர்பான கட்டமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை.. கழிவு நீரில் பெரும்பாலும் டிடர்ஜென்ட் கழிவுகளும், கழிப்பறை கழிவுகளும் ஒன்றாக கலப்பதால் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு நுரையாக பொங்குகிறது.
குடிநீர் ஆதாரம்: இந்தக் கழிவு நீர் வர்தூர் உள்ளிட்ட ஏரிகளில் நேரடியாக கலப்பதால் ஏரியும் நுரையாக பொங்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நச்சுக் கழிவுகள் தொடர்ந்து ஏரியில் கலப்பதால் அங்குள்ள நீர்வாழ் உயிரினங்கள் முற்றிலுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கழிவு நீரின் துர்நாற்றம், காற்றில் கலப்பதால் அதனை சுவாசிப்போருக்கும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது... அதுவும் இல்லாமல், இந்த கழிவு நீரானது காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலப்பதால் அந்த நீரை குடிநீராகப் பயன்படுத்தும் பெங்களூரு, தமிழ்நாடுவாழ் மக்களுக்கு கொடிய நோய்கள் ஏற்படும்'' என்று எச்சரிக்கிறார்கள்.

இறையன்பு கடிதம்: இந்நிலையில் காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக தலைமை செயளாளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில், "காவிரியில் நடப்பு ஆண்டு 2022 - 23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இந்த ஆண்டு 484 டி.எம்.சி கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு: மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது.. எனவே, காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்" என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு தன்னுடைய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.. இதையடுத்து, கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications