கோவையில் பி.இ. மாணவர் தூக்கு போட்டு தற்கொலை: உடலை வாங்க மறுக்கும் குடும்பம்
கோவை: கோவை நீலாம்பூரில் உள்ள கதிர் பொறியியல் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படித்து வந்த மாணவர் விக்னேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
கோவை நீலாம்பூரில் இருக்கும் கதிர் பொறியியல் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படித்து வந்தவர் விக்னேஷ். அவர் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாகத் தொங்கியது நேற்று இரவு 9 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோட்டை சேர்ந்த விக்னேஷ் இறந்த செய்தியை கல்லூரி நிர்வாகம் அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விக்னேஷ் மது அருந்திவிட்டு மாணவர் ஒருவரை தாக்கியதாகக் கூறி கல்லூரி நிர்வாகம் அவரது செல்போன், ஐடி கார்டை பறிமுதல் செய்து அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி தண்டனை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த விக்னேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு குடிப்பழக்கம் இல்லை என்றும், அவர் செய்யாத தவறுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நான் மது அருந்தியதாக பொய் சொல்லி புதன்கிழமை என்னை கேஷியர் சிஇஓ மற்றும் கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்றார். அவர்கள் என்னை கடிதம் எழுதுமாறு கூறினர். கடிதம் எழுதிக் கொடுத்தால் என்னை விட்டுவிடுவதாக தெரிவித்தனர். நானும் சம்மதித்தேன். ஆனால் நான் மது அருந்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கல்லூரி முன்னாள் அதிமுக உறுப்பினருக்கு சொந்தமானது என்றும், அதனால் போலீசார் நிர்வாகத்தினருக்கு சாதகமாக நடப்பதாகவும் விக்னேஷின் தாய் சாந்தி தெரிவித்துள்ளார். கல்லூரி நிர்வாகம் தானாக முன்வந்து போலீசில் உண்மையை சொல்லும் வரை விக்னேஷின் உடலை வாங்கப் போவது இல்லை என்று சாந்தி மேலும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications