உரிமைக்காக கொஞ்சம் கூட போராடாத வீணர்கள்.. பரிதாப நிலையில் தமிழக மக்கள்!
Recommended Video

சென்னை: தங்களுக்குள் அரசியல் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டார்களே தவிர தமிழக விவசாயிகளின் உரிமைக்காக கொஞ்சம் கூட இறங்கிப் போராடவில்லை நமது ஆட்சியாளர்கள். ஆனால் மறுபக்கம் கர்நாடகத்தில் அத்தனை கட்சிகளும் தங்களது மாச்சரியங்களைத் தூக்கிப் போட்டு விட்டு உயிரைக் கொடுத்து இந்தத் தீர்ப்பை பெற்று சாதித்துள்ளனர்.
நாள்தோறும் எத்தனை விவசாயிகள் செத்து மடிகிறார்கள், டெல்டா பாலைவனமாகி வருகிறது. ஆனால் இதையெல்லாம் உணர்ந்து துடிக்கவில்லை யாருமே. கட்சிகள் எதுவுமே கை கோர்த்து செயல்பட முன்வரவில்லை. அதிமுக, திமுக, அது இது என்று பிரிந்து கிடக்கிறார்களே தவிர இருவரும் கை கோர்த்து போய் டெல்லியில் புயலைக் கிளப்பியிருக்க வேண்டாமா.. செய்யவில்லை.
திமுக அரசு செய்ததில் பாதியைக் கூட இந்த அதிமுக அரசு செய்யவில்லை என்பது உண்மை. இருப்பதையும் கோட்டை விட்டு விட்டு தமிழக விவசாயிகளுக்குப் பெரும் துரோகம் இழைத்துள்ளது அதிமுக அரசு.

நீதியை நிலை நாட்ட துடிக்கவில்லை
உச்சநீதிமன்றத்தில் விசாரணையின்போது தமிழக தரப்பு ஆணித்தரமாக தனது வாதங்களை வைக்கவில்லை. நீரைக் குறைப்பது தொடர்பாக சில முறை நீதிபதிகள் கேட்டபோது அதை தமிழகத் தரப்பு உறுதிபட எதிர்த்ததாக தெரியவில்லை.

தமிழக நிலையை சரியாக சொல்லவில்லை
தமிழக விவசாயிகளின் நிலையை, தமிழகத்தின் சரியான நீர்த் தேவையை, தமிழக காவிரி டெல்டா பகுதியின் மோசமான நிலையை சுப்ரீம் கோர்ட்டில் சரிவர எடுத்து வைக்கவில்லை தமிழக தரப்பு.

சரியான வக்கீல் இல்லை
தமிழக அரசு சார்பில் சரியான வக்கீல் ஆஜராகவில்லை. மறுபக்கம் கர்நாடகத் தரப்பில் பாலி நாரிமன் மிகவும் சாதுரியமாக வாதிட தனது மாநிலத்திற்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். தமிழக அரசு இதில் காட்டிய அலட்சியம் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இதைவிட பெரிய துரோகம் என்ன
கிட்டத்தட்ட தன்னுடைய விவசாயிகளை, தனது மாநில உரிமையை, தனது மக்களை கைவிட்டுள்ளது அதிமுக அரசு. இதே அதிமுக அரசின் முதல்வராக இருந்த ஜெயலலிதா போராடியதில் பாதியைக் கூட இந்த அதிமுக அரசு செய்யவில்லை என்பது பெரும் வேதனையானது.
மொத்தத்தில் தங்களுக்கு பெரும் துரோகத்தை செய்து விட்டது இந்த அரசு என்பது விவசாயிகளின் குமுறலாக உள்ளது.












Click it and Unblock the Notifications