இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 33 மீனவர்கள் நேற்று ராமேஸ்வரம் திரும்பினர்
ராமேஸ்வரம்: நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்ட 33 தமிழக மீனவர்களும், நேற்று அவர்களது சொந்த ஊரான ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
கடந்த 1-ந்தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 29 மீனவர்கள் 7 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவ்ர்களைக் கைது செய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கச்சத்தீவு அருகே படகு பழுதாகி தவித்த 4 மீனவர்களும் பிடித்துச் செல்லப்பட்டு, மன்னார் மீன்துறை அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
முன்னதாக பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே நல்லெண்ண நடவடிக்கையாக அப்போது சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்திருந்தார்.
ஆனால், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யபட்டதற்கு தமிழக கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 33 தமிழக மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய, இலங்கை அதிபர் ராஜபக்சே பரிந்துரை செய்தார். அதன்பேரில் 33 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
நேற்று மாலை விடுவிக்கப்பட்ட 33 மீனவர்களையும், ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து நேற்று மாலை 4.30 மணிக்கு ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்ட 33 மீனவர்களுக்கும் மீனவர் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications