Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளநீர் வடிந்தும் வடியாத துயரம்... அரையாண்டு தேர்வை எழுத தயாராக இருக்கிறார்களா மாணவர்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருவமழை கொட்டோ கொட்டு என்று கொட்டித்தீர்த்ததில் பேரழிவை ஏற்படுத்தும் அளவிற்கு வெள்ளம் பெருகி சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை துவம்சம் செய்துவிட்டது. இந்த வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்புகளும், ஆக்கிரப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கல்வி நிறுவனங்களும்தான். வெள்ளம் வடிந்த பின்னரும் பலரது துயரம் வடியவில்லை. வாழ்வாதரங்களை இழந்து தவிக்கும் பல மாணவர்கள் அரையாண்டு தேர்வை எழுத தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மழை வெள்ளத்தால் கோடைகால விடுமுறையைப் போல மழைக்கால விடுமுறை 1 மாதம் வரை பள்ளி மாணவர்களுக்கு கிடைத்து விட்டது. மழை வெள்ளம் வடிந்து வருகிறது. குடியிருப்புகள் மட்டுமல்லாது தாழ்வான பகுதிகளில் இருந்த பள்ளிகளும், கல்லூரிகளிலும் கூட வெள்ளநீர் பல அடி உயரத்திற்கு தேங்கி வடிந்துள்ளது. சில இடங்களில் இன்னமும் வடியவில்லை.

சேறும் சகதிகளும் நிறைந்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளன பள்ளிகளின் சுற்றுப் புறங்கள். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறை முடிந்து மீண்டும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் ஏனைய அனைத்து மராமத்து பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 14ல் பள்ளிகள் திறக்கப்படுமா?

டிசம்பர் 14ல் பள்ளிகள் திறக்கப்படுமா?

டிசம்பர் 14ம் தேதி பள்ளிகள் நடத்தப்படும் நிலையில் உள்ளது என்று உறுதிபடுத்தும் வகையில் அனைத்து தலைமையாசிரியர்களிடமும் உறுதிமொழி கடிதத்தை பெற்று தொகுத்து தனி நபர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனர் பெயரிட்ட உறையில் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால் பல பள்ளிகளில் வகுப்பறைகள் வெள்ள நீரில் ஊறியதால் சேறும், சகதியுமாகவே உள்ளது.

சீருடைகள், புத்தகங்கள்

சீருடைகள், புத்தகங்கள்

சென்னை அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள், லேப்டாப்கள், ஷூக்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. இதேபோல கடலூரிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பாடப் புத்தகங்கள், சீருடைகளை வெள்ளநீர் கொண்டு போய்விட்டது. நவம்பர் மாதம் பெய்த மழையில் வெள்ளம் கொண்டு போன புத்தகங்களுக்கு பதிலாக கொடுக்கப்பட்ட புத்தகங்களை மீண்டும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதுதான் சோகம். இதனால் பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்வதிலிருந்து மாணவ, மாணவிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எழுதிய நோட்டுக்கள்

எழுதிய நோட்டுக்கள்

புத்தகங்களுக்குப் பதிலாக புதிய புத்தகங்களை அரசு அளித்து விடும் அதே நேரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் எழுதிய நோட்டுக்களும், செய்து வைத்திருந்த அசைன்மெண்டுகளும் பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த அவையும் வெள்ளத்திதோடு வெள்ளமாய் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அவற்றை திரும்ப எழுத முடியுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

மாணவர்கள் வந்தால் மட்டும் போதும்

மாணவர்கள் வந்தால் மட்டும் போதும்

சென்னை அமைந்தகரை, ஷெனாய் நகர் உள்ளிட்ட இடங்களில் கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மாணவர்கள், ஷெனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் 800 மாணவர்களில், 500-க்கும் மேற்பட்டோர் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சீருடைகளோ, நோட்டுப் புத்தகங்களோ எதுவுமே இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் என தலைமை ஆசிரியர் ஜான் அறிவுறுத்தியுள்ளார்

பொது அறிவிப்பு வேண்டும்

பொது அறிவிப்பு வேண்டும்

மிகப்பெரிய அளவில் மழை, வெள்ளம் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களைப் பாதித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிதாக சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்படும் வரை பள்ளிகளில் அவற்றை வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல், தனியார் பள்ளி மாணவர்கள் புதிதாகச் சீருடைகள் வாங்கும் வரை அவர்களிடமும் சீருடைகளை அணிந்து வர வற்புறுத்தக் கூடாது என அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதம் விடுமுறை

ஒரு மாதம் விடுமுறை

தீபாவளிக்கு முன்பு நவம்பர் 7ம்தேதி பள்ளிகள் விடுமுறைக்காக மூடப்பட்ட பின்னர் 19 நாட்களுக்கு பிறகு கடந்த 26ம்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. 3 நாட்கள் பள்ளிகள் திறந்து செயல்பட்டன. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளில் வெள்ள நீர் முழுமையாக வடியாததால் சுமார் 50 பள்ளிக்கூடங்கள் திறக்காமல் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நவம்பர் 30ம் தேதி முதல் பெய்த மழையால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்னமும் திறக்கப்படவில்லை.

15 நாட்களுக்குள் தயாராகிவிடுவார்களா?

15 நாட்களுக்குள் தயாராகிவிடுவார்களா?

பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு ஒருமாதங்களுக்கு மேலாகிவிட்டது. பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விட்டன. இதேபோல அரையாண்டு தேர்வுகளும் ஜனவரி முதல்வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. ஆனால் பள்ளிகள் அடுத்த வாரத்தில் திறக்கப்பட்டாலும் அனைத்து பாடங்களையும் மாணவர்கள் மீண்டும் எழுதி படித்து விடுவார்களா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் இடையில் விடப்படவேண்டும்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

கடந்த 1 மாதங்களாக பள்ளிகள் முழுமையாக செயல்படாததால் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு ஜனவரி மாதம் முதல்வாரத்தில் வைக்கப்பட்டாலும், அதற்கு அடுத்த படியாக பிப்ரவரியில் செயல்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு மார்ச் மாதம் ஆண்டு தேர்வுகள் நடத்த தயாராக வேண்டும்.

செயல்முறை தேர்வுகள் நடத்துவது எப்படி?

செயல்முறை தேர்வுகள் நடத்துவது எப்படி?

பெரும்பாலான பள்ளிகளில் பிராக்டிகல் வகுப்புகள் நடத்தும் லேப்கள் தரைத்தளத்தில் இருந்த காரணத்தால் மழைநீர் புகுந்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் அனைத்து நாசமாகிவிட்டன. இதனால் பல பள்ளிகளில் செயல்முறை தேர்வுகள் நடத்துவதிலும் சிக்கல்தான் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்.

ரத்து செய்யவார்களா? கல்வியாளர்கள்

ரத்து செய்யவார்களா? கல்வியாளர்கள்

இயற்கையின் சீற்றத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அரையாண்டு நடத்துவது சரியல்ல. மாணவர்களின் நலன் கருதி தேர்வை ஒத்தி தை திருநாளுக்குப் பின்னர் நடத்த வேண்டும் அல்லது வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கால அவகாசம் தேவை

கால அவகாசம் தேவை

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புத்தகங்களை முழுமையாக படித்தால்தான் அதிக மதிப்பெண் பெற முடியும். பாடங்களுக்கு பின்புறம் வினாக்கள் மட்டும் படித்தால் போதாது. வினா வங்கி புத்தகங்களும் பயன் தராது என்று பள்ளிக்கல்வி இந்த ஆண்டு அறிவித்துள்ளதால் பாடப் புத்தகங்களை முழுமையாக படிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

அவசரம் வேண்டாமே

அவசரம் வேண்டாமே

பிளஸ்2 தேர்வு மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்க கூடியது. அதனால் அவசர அவசரமாக தேர்வு வைக்காமல் படிப்பதற்கு கால அவகாசம் வழங்கி அரையாண்டு தேர்வை நடத்த வேண்டும். அது போல முழு ஆண்டு தேர்வையும் 10 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும். மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை பொதுத் தேர்வுகளை நடத்தினால் தான் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். தேர்வுகளை நடத்துவதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர் கல்வியாளர்கள்.

மத்திய அரசு பள்ளிகள்

மத்திய அரசு பள்ளிகள்

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் வரும் 16ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகளை நடத்தப்போவதாக அட்டவணை அளித்துள்ளன. சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள கேந்திரியா வித்யாலாயா பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதற்கு தயாராக இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். எனவே மத்திய அரசு கல்வி நிறுவனங்களும் இந்த தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+