7 பேர் விடுதலை: இன்று ஆளுநர் ஆலோசனை நடத்த வாய்ப்பு.. முக்கிய அறிவிப்பு?
7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடந்த இந்த ஆலோசனை 2 மணி நேரம் நடந்தது.

பரிந்துரை
ஆலோசனையின் முடிவில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் பரிந்துரை கடிதம் நேற்றே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநர் எடுக்கும் முடிவுதான் இறுதி
இதுகுறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். விதி எண் 161ன் கீழ் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் முடிவு எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார். அதன்பின்பே விடுதலை செய்வது நடக்கும்.

ஆளுநர் என்ன செய்வார்
இதில் ஆளுநர் மூன்று விதமான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.
1. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்வது (பொதுவாக மற்ற விஷயங்களில் ஆளுநர் அம்மாநில அரசின் பரிந்துரையை ஏற்பதே வழக்கம்).
2. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பது (இதுபோன்ற முடிவுகள் மிகவும் முக்கியமான சிக்கலான கோரிக்கையின் போது நடக்கும்).
3.எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது.

இன்று முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதில் காலம் தாழ்த்த போவதில்லை என்று கூறப்படுகிறது. நேற்றே ஆளுநரின் செயலாளர் டெல்லியில் இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் உரையாடி உள்ளார். இதனால், இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இன்றே முக்கிய அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications