அடிக்குது அனலு…. சென்னையில் 105 டிகிரியை தொட்ட வெயில்… 2 நாளைக்கு கொளுத்துமாம்!!
சென்னை: தமிழகத்தில் கோடை காலத்துக்குப் பின்னரும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில், 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
தமிழகத்தில் மேலும் 2 அல்லது 3 டிகிரி அதிகரிக்கும் என்றும் சென்னையில் பகலில் வெயில் கடுமையாக இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்னிநட்சத்திரகாலம் முடிந்து தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மற்ற பகுதிகளைவிட அதிகமான வெயில் பதிவாகி வருகிறது. இதில் சென்னை, கடலூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் கடந்த 5 நாட்களில் வெயில் 100டிகிரிக்கும் மேலாகவே பதிவாகியுள்ளது.

அனல் காற்று
சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான அனல் காற்றுடன் கூடிய வெப்பம் நிலவி வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை வீசிய அனல் காற்றின் தீவிரத்தால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாயினர். கடும் வெப்பத்தால் மாலை நேரத்தில் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரியில் 106 டிகிரி
ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று புதுச்சேரியில் 106 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடலூரில் 104 டிகிரி வெப்பமும், தூத்துக்குடி, மதுரை, திருச்சி 102 டிகிரி வெப்பமும் பதிவானது.

வேலூரில் 101 டிகிரி வெப்பம்
வேலூர், நாகப்பட்டினம் 101 டிகிரி வெயிலும், காரைக்காலில் 101யும், பாளையங்கோட்டையில் 100 டிகிரியும், சேலம், திருப்பத்தூர் 99 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி பகுதியில் 98டிகிரியும், தருமபுரி 97 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது.

வெயில் அதிகரிக்கும்
இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு இரண்டு முதல் மூன்று டிகிரி கூடுதலாக வெயில் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வந்தது வெயில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications