தலைமை செயலகம் முதல் அத்தனை அரசு அலுவலங்களிலும் டாஸ்மாக் கடையை திறங்க- குடிமகன்களின் குபீர் கோரிக்கை
நெடுஞ்சாலைகளில் மூடப்பட்டுள்ள மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க உத்தரவு வரும் வரை தலைமை செயலகத்தில் மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அதிரடி கோரிக்கை வி
சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்டுள்ள மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க உத்தரவு வரும் வரை தமிழக அரசின் தலைமை செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அதிரடியாக கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சமூக பாதுகாப்பு கருதியும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்த 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. நாடு முழுவதும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

டாஸ்மாக் ஊழியர்கள் வேலையிழப்பு
இதனால் டாஸ்மாக் கடைகளின் ஊழியர்கள் வேலைகளை இழந்தனர். இதனால் ஊருக்குள் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான இடங்களை அமைக்க முயற்சித்தனர்.

மக்கள் துவம்சம்
இதுகுறித்து தகவலறிந்த மக்கள் ஆங்காங்கே தொடங்கப்படும் டாஸ்மாக் கடைகளையும் , அங்கு வரவழைக்கப்பட்ட சரக்கு பாட்டில்களையும் உடைத்து கடைகளை துவம்சம் செய்து வருகின்றனர். இதனால் ஊருக்குள்ளும் கடை திறக்க முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் குடிமகன்களின் பிரச்சினையோ அதற்கு மேல் உள்ளது. ஊறுகாய் பொட்டலங்களுடன் மதுபானக் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

மதுபானக் கடைகள் திறக்க
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுத்துக் கொண்டு அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற சிறப்பு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சி செய்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து நீதிபதி கூறுகையில் நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி வசம் ஒப்படைக்கப்பட்டாலும் மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

அதிக விலைக்கு மது விற்பனை
இந்நிலையில் 3500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கையில், மதுபானக் கடைகள் தங்குதடையின்றி கிடைக்க டாஸ்மாக் கடைகளை திறந்தாக வேண்டும். அதன் விலை அதிகரிப்பை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் சரக்குக் கடை
நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க மறு உத்தரவு வரும் வரை தலைமைச் செயலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்கள், எம்எல்ஏ அலுவலகங்கள் ஆகியவற்றில் டாஸ்மாக் கடைகளை தொடங்க வேண்டும் . அதையும் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சரி அரிசி, பருப்பு, சோப், சீப்பு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்கும் போது சரக்குகளையும் விற்கலாமே!












Click it and Unblock the Notifications