டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் மர்ம மரணம்- இடஒதுக்கீடு 'சீட்டுக்காக' கொலை?
திருப்பூர்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்த தமிழக மாணவர் சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன், மதுரை மருத்து கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர்தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்திருந்தார்.
டெல்லி கெளதம் நகரில் தங்கியிருந்த சரவணன் கடந்த 10-ந் தேதியன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது வலது கையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதற்கான அடையாளங்களை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

டெல்லியில் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் சரவணனின் உடல் திருப்பூருக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக சரவணன் தந்தை கணேசன் கூறுகையில், என் மகனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. போதை பழக்கமோ, ஊசி மூலம் மருந்து போட்டுக்கொள்ளும் வழக்கமும் இல்லை. அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. எனது மகன் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
சரவணனுன் படித்த சக மாணவரான பண்ருட்டி சுப்பிரமணியனோ, சரவணனின் வலது கையின் தமனி நரம்பில் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக வலது கை பழக்கம் உள்ளவர்கள், இடது கையில்தான் ஊசி போட்டுக் கொள்ள முடியும்.
சரவணன் தம்முடைய வலது கையில் தாமே ஊசி போட்டிருக்க வாய்ப்பே இல்லை. மற்றவருடைய உதவியில்லாமல் ஒருவர் தமக்கு தானே தமனி நரம்பில் ஊசி போடவே முடியாது என்பது அனைத்து மருத்துவருக்கும் தெரியும். எனவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும் வகையில் இல்லை என்றார்.
அதே நேரத்தில் சரவணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மாணவர்களோ திடுக்கிடும் தகவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் தெரிவித்த கருத்து:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பது மருத்துவம் படிப்போரின் உயர்ந்தபட்ச கனவு. அங்கு சேருவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு 3 கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 1,2வது கலந்தாய்வுகள் முடிந்து விட்டன. 3-வது கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 24-ந் தேதி நடைபெறவுள்ளது.
ஜூலை 19-ந் தேதி வரை காலியாக உள்ள இடங்களுக்கு 3-வது கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதன்படி தற்போது சரவணன் இடம் காலியாகி இருப்பதால் 3-வது கட்ட கலந்தாய்வில் ஒரு மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதில் நேரடி திறந்த நிலைப் போட்டியில் இடம் கிடைக்காதவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். ஆகையால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும் என்பதற்காக, போட்டியில் இருக்கும் ஒருவர்தான் மர்மமான முறையில் மருத்துவர் சரவணனை கொலை செய்திருக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம்.
ஆகையால் சரவணன் உயிரிழந்த விவகாரம் குறித்து தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி உண்மையைக் கண்டறிய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதை தனிப்பட்ட ஒரு சரவணனின் மரணமாக தமிழக அரசு பார்க்க கூடாது.
இவ்வாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
இடஒதுக்கீடு கோட்டாவில் எப்படியும் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக சரவணனை கொலை செய்து ஒரு காலி இடத்தை வேண்டும் என்றே உருவாக்கியுள்ள அந்த கொடூர கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் தமிழக மருத்துவர்களின் ஒற்றை குரலாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications