அப்போ சோகம்... இப்போ சந்தோசம்... அதிமுகவினரின் அடேங்கப்பா நேர்த்திக்கடன்
தூத்துக்குடி: ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதால் சோகத்தோடு கோவில் கோவிலாக ஏறி இறங்கிய அதிமுகவினர், அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் கோவில் கோவிலாக ஏறி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, திருச்செந்தூரில் மொட்டை போட்டு பிரார்த்தனை செய்தார். இதேபோல திருப்பூர் மேயர் விசாலாட்சி பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர்.
நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகிறேன் பேர்வழி என்று அதிமுகவினர் மறுபடியும் கோவில்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளதால் மீண்டும் பரபரப்பு அதிகரித்துள்ளது. அதிமுகவினர் சந்தோசத்தில் கோவில்களுக்குப் போய் மொட்டையடித்து, அபிஷேக ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடனை சந்தோசமாக நிறைவேற்றி வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாடுதான் படுதிண்டாட்டமாகியுள்ளது.

100008 நெய் தீபம்
கடந்த 5ஆம் தேதி மாலை கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் ‘அம்மா' என்ற எழுத்துகள் இருப்பதுபோல ஒரு லட்சத்து எட்டு விளக்குகள் வைத்து பூஜை நடத்தினார். இதற்காக 7,200 லிட்டர் நெய் வாங்கப்பட்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் நடக்கவே இடம் இல்லாத அளவுக்கு விளக்குகளால் நிரம்பியிருந்தது. விடியவிடிய அந்த விளக்குகள் அணையாமல் எரிந்தது.

அணையாதீபம்
மே 6ஆம் தேதி காலை நவக்கிரஹ சாந்தி ஹோமம், அஸ்திர ஹோமம் என்ற பிரமாண்ட ஹோமங்களையும் நடத்தினார் செந்தில்பாலாஜி. தீர்ப்புக்கு முதல் நாள் அதாவது மே 10ஆம் தேதி தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்கள் அனைத்திலும் அணையா விளக்கு ஏற்றப்பட்டது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்டம் ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கோயிலில் விளக்குபூஜை, தென்கயிலை என்று சொல்லப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் 108 திரவியங்களுடன் சத்ரு சம்ஹார ஹோமத்தை நடத்தியிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

நேர்த்திக்கடன் நிறைவேற்றம்
இப்போது சொத்து குவிப்பு வழக்கில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க., வினர் தங்களது நேர்த்திக்கடன்களை கோவில் கோவிலாக செலுத்தி வருகின்றனர்.

பைரவருக்கு பூசணிக்காய் விளக்கு
அஷ்டமி தினத்தன்று ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அகதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு 67 பூசணிக்காயில் அமைச்சர் வளர்மதி நெய் தீபம் ஏற்றி வழிபட்டார்.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முருகன் கோவிலில் மொட்டை
உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ள வேலுமணி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட அ.தி.மு.க.,வினர் நேற்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா பெயரில் முருகன் கோயிலில் அர்ச்சனை செய்து சிறப்பு பிரார்த்தனையும் செய்தார்.

21 பேர் மொட்டை
தூத்துக்குடியில் மேயர் அந்தோணிகிரேஸ் தலைமையில் 21 அ.தி.மு.க., தொண்டர்கள் மொட்டை போட்டுக் கொண்டனர்.

திருப்பூர் மேயர் மொட்டை
ஜெயலலிதா விடுதலையையொட்டி திருப்பூர் மேயர் விசாலாட்சி பழனி முருகன் கோவிலில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார்.

மேட்டூரில் 50 பேர்
மேட்டூர் நகர செயலாளர் உள்பட, 50 பேர் மொட்டை போட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். மேட்டூர் சின்னபார்க் அருகில், அ.தி.மு.க., மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன், மின்சார பிரிவு மாநில தலைவர் சம்பத், 21வது வார்டு கவுன்சிலர் விஜயா உள்பட நிர்வாகிகள், கட்சியினர் மொட்டை போட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

கல்லா கட்டும் சலூன் கடைகள்
இதுநாள்வரை தாடியும், மீசையும், ஜடா முடியுமாக இருந்த அதிமுகவினரால் சலூன் கடைகளில் வருமானம் குறைந்து போயிருந்தது. தற்போது சோகத்தை மறந்து தலையை மொட்டை போடத்தொடங்கியுள்ளதால் சலூன் கடைகள் மீண்டும் கல்லா கட்டத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications