ஜெயலலிதா உடல் நலம் பெற இசைப் பிரார்த்தனை- தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி சென்னையில் சிறப்பு இசைப்பிரார்த்தனை நடைபெற்றது. சென்னை இசை பல்கலை.யில் துணைவேந்தர் வீணை காயத்ரி தலைமையில் மாணவர்கள் இசைப்பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
தமிழக முதலவர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண உடல்நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்று வருகின்றன.

சிறப்பு வழிபாடுகள்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் பாதயாத்திரை சென்று சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர்.
பத்மநாபபுரம் சாய்பாபா திருக்கோயிலில் தன்வந்திரி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தேவாலயத்தில் வழிபாடு
சோழவரம் அருகே காந்திநகரில், கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பேரணியாக சென்று, கூட்டு சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
திருவள்ளூர் ஆரியம்மன் திருக்கோயிலில் 108 குட பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காரப்பாக்கம் அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயிலில் ஆயுஷ், பிருத்யங்கரா, ராஜதிருஷ்டி ஹோமம் மற்றும் பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

பாலபிஷேகம் வழிபாடு
மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் அதிமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 1008 பெண்கள் பால்குடம் எடுத்து, வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தேர் இழுத்து வழிபாடு
அச்சரப்பாக்கத்தை அடுத்த பெரும்பேர் கண்டிகை பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணியர் கோயிலில் ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில், அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் வெள்ளித்தேர் இழுத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பால்குடம் எடுத்த தொண்டர்கள்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், அருள்மிகு ஆதிசிவாம்பிகை உடனுறை ஆதிசிவன் திருக்கோயிலில் நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். நாகை மாவட்டம் நல்லமாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். கோடியக்கரை பெரியமுத்து மாரியம்மன் ஆலயம், தானிகோட்டகம் சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஆயுஷ் ஹோமம் வழிபாடு
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் யாக குண்டம் அமைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஸ்ரீநாடியம்மன் ஆலயத்தில் ஆயுஷ் ஹோமம் உள்ளிட்ட வழிபாடு நடைபெற்றது. அருள்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

தர்காவில் தொழுகை
ராமநாதபுரம் மாவட்டம் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் ஏர்வாடி தர்ஹாவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பரமக்குடி முத்தாளம்மன் கோயிலில், வெள்ளி ரதம் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 108 சிதறு தேங்காய்கள் உடைத்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அருள்மிகு மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

வீணை காயத்திரி இசை பிராத்தனை
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி சென்னையில் சிறப்பு இசைப்பிரார்த்தனை நடைபெற்றது. சென்னை இசை பல்கலை.யில் துணைவேந்தர் வீணை காயத்ரி தலைமையில் மாணவர்கள் இசைப்பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் வழிபாடு
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருள்மிகு தட்டாங்குளத்து காளியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications