2014ல் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறுமாம்: ஜெயலலிதா உறுதி!
சென்னை: தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு நீங்கிவிட்டது. 2014ம் ஆண்டில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் சிறு, குறு தொழில்களுக்கும், விவ சாயிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க கோரும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்கள்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தற்போது பேசிய உறுப்பினர்கள் பாலபாரதி, ஆறுமுகம் ஆகியோர் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு நிலைமை பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். இதனால், சிறு, குறு தொழில்கள் நடத்துபவர்கள் பாதிக்கப்படுவதாக தற்போது குறிப்பிட்டார்கள்.
இன்றைய நிலைமையில் மின்வெட்டு குறித்து கவலைப்படக்கூடிய எந்தச் சூழ்நிலையும் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக, ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது. நான் 2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, தமிழகத்தின் மின் பற்றாக்குறை 4,000 மெகாவாட் அளவுக்கு இருந்தது. இதற்குக் காரணம், ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே வரும் மின் தேவைக்கு ஏற்ப புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தீட்டாதது, ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட திட்டங்களை சரிவர நிறைவேற்றாதது, மின் விநியோக கட்டமைப்புகளை மேம்படுத்தாதது, நீண்டகால அடிப்படையில் பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யாதது என பல குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சரியான பராமரிப்பில்லை
இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கு அனல் மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாதது, மின் உற்பத்தித் திட்டங்களை விரைவுபடுத்தாதது, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்குரிய மின்சாரத்தை பெற முடியாதது என பல்வேறு காரணங்கள் உள்ளன.
நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். மின் பற்றாக்குறையை நீக்க எனது தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நான் இந்த மாமன்றத்தில் பல முறை விரிவாக எடுத்துரைத்து இருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை போக்கப்படும் என்றும் நான் தெரிவித்து இருந்தேன்.
600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப் பணிகளைப் பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலமான ஐந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தத் திட்டத்தினை விரைவுபடுத்தியதன் காரணமாக, தற்போது இந்தத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, இதிலிருந்து தற்போது நமக்கு தொடர்ந்து 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்தின் நிலை 2-ன் முதல் அலகை எடுத்துக் கொண்டால், 50 விழுக்காட்டிற்கும் குறைவான பணிகளே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்தத் திட்டத்தின் பணிகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக, தற்போது இந்தத் திட்டத்திலிருந்து நமக்கு 300 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் 600 மெகாவாட் மின்சாரம் இதிலிருந்து நமக்கு கிடைக்கும்.
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 2-ன் இரண்டாவது அலகுப் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து 350 முதல் 450 மெகாவாட் மின் உற்பத்தி நமக்கு கிடைக்கிறது. நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்தத் திட்டத்தின் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட புதிய அனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது.
இது தவிர மத்திய கால அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பெறப்பட்டு வருகின்றது.
தென்மேற்கு பருவமழை
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை சிறப்பாக பெய்த காரணத்தால் நீர்மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த் தேக்கங்கள் ஏறத்தாழ முழு கொள்ளளவு நிலையை எட்டியுள்ளன. வருகின்ற வட கிழக்கு பருவ மழையும் நன்றாகவே அமையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காரணங்களாலும் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
மும்முனை மின்சாரம்
சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 180 மில்லியன் யூனிட்டுகளாக இருந்து வந்த தினசரி மின் வினியோகம், இந்த ஆண்டு அதிகபட்சமாக 270 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் நாள் அன்று இதுவரை இல்லாத உச்ச தேவையான 12,118 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவு செய்தது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 15.6.2013 முதல் தினசரி 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நிகழும் மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்ததற்கு ஏற்ப, 1.10.2013 முதல் உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்வெட்டு, உச்சத் தேவையான மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையுள்ள நேரம் நீங்கலாக, இதர நேரங்களில் 40 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே அறிவித்ததற்கேற்ப, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீங்கி, தங்கு தடையின்றி அனைத்து தரப்பு நுகர்வோர்களுக்கும் மின்சாரம் கிடைக்கப் பெறும் இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications