கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த கோடை மழை..4 மாவட்டங்களில் ஜில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக தமிழக தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. அடுத்த 3 மணி நேரத்திற்கு நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக நேற்று பல இடங்களில் கோடை மழை பெய்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. இதன்படி, ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதேபோல், மதுரை திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது. வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு கோடை மழை குளிர்ச்சியான சூழலை உருவாக்கி இருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதனிடையே தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலுக்கு இதமாக கொட்டப்போகும் மழையை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications