கள்ளக்குறிச்சிக்கு படையெடுக்கும் “டாப்” தலைவர்கள்.. மிகப்பெரிய அளவில் வெடித்த விஷ சாராய விவகாரம்!
கள்ளக்குறிச்சி: அரசியல் தலைவர்களின் பார்வை கள்ளக்குறிச்சியை நோக்கித் திரும்பி உள்ளது. இன்று ஒரே நாளில் பல்வேறு முக்கிய தலைவர்கள் கள்ளக்குறிச்சி செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்திய பலர், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் குறைவு காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அடுத்தடுத்து அவர்களில் பலர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

அதிர்ச்சி அலை: இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் சுமார் 90 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 10 பேர் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்கள் படையெடுப்பு: இதற்கிடையே கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கள்ளக்குறிச்சியை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்பி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி ஆறுதல்: மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கள்ளக்குறிச்சி விஷ சாராய விற்பனை சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து இன்று ஆறுதல் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மேலும், விஷச்சாராயம் குடித்து பலியானோரின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அமைச்சர் உதயநிதி: தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும், பலியானோர் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்யவும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார்.
பிரேமலதா: அதேபோல, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தச் சம்பவம் குறித்து அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் இருப்பவர்களை சந்திக்கவும் பிரேமலதா கள்ளக்குறிச்சி செல்கிறார்.
அண்ணாமலை: மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கள்ளக்குறிச்சி செல்கிறார். கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் கள்ளக்குறிச்சி நோக்கி படையெடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications