கிளம்பிட்டீங்களா ஊருக்கு.. அப்ப உங்களுக்குதான் இந்த நியூஸ்.. தமிழக அரசு மாஸை பாருங்க.. அசந்துடுவீங்க
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன.. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

4 நாட்கள் விடுமுறை: வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் பஸ்களில் கூட்டம் நிரம்புகிறது... எனவே, நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் இந்த பயண சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த சலுகையை சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருக்கிறார்.. அதாவது, 5 முறை பயணம் செய்வதற்கு, எந்தவிதமான சலுகையும் கிடையாது... அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும், பாதி கட்டணம் செலுத்தினால் போதுமாம். ஆனால், ஒரே இடத்திற்கு, இந்த பயணம் அமைய வேண்டும். அதேபோல, எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து ரிசர்வேஷன் செய்ய வேண்டும். பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது...
அதேபோல இன்னொரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. அரசு 'ஏசி' பஸ்களுக்கு, பயணியரிடையே தற்போது அதிக வரவேற்பு காணப்படுகிறதாம். தனியார் பஸ்களின் பயண கட்டணத்தை விட, அரசு ஏசி பஸ்களின் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், பயணிகள் அதிகளவில் அரசு ஏசி பஸ்களுக்கு முன்பதிவு செய்கிறார்களாம்.. அதனால் வரும் ஜூன் வரை, அனைத்து ஏசி பஸ்களையும் இயக்க உத்தரவிட்டிருக்கிறார்களாம்.

ரிசர்வேஷன்: சென்னையை பொறுத்தவரை, கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, பெங்களூர், புதுச்சேரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 329 ஏசி பஸ்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பஸ்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரிசர்வேஷன் நடக்கவில்லை. இப்போது கோடை விடுமுறை துவங்கிவிட்டது..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஏசி பஸ்களில் பயணம் செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏசி பஸ்கள்: இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் சொல்லும்போது, கோடை காலத்துக்கு முன்பு வரை குளிர்சாதன பஸ்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. முன்பதிவும் அதிகம் இருக்காது. ஆனால் இப்போது ஏசி பஸ்களில் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் குளிர்சாதன வசதி கொண்ட அரசு விரைவு பஸ்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. முன்பதிவும் முழுஅளவில் இருப்பதால் 329 பஸ்களும் முழுவதும் இயக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications