ஜெ., உடல்நிலை... டிராபிக் ராமசாமியால் வந்த நெருக்கடி: என்ன செய்யும் அரசு?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி. ஏழரை கோடி தமிழ் மக்கள் வாழ்வின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் உரிய முறையில் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் முதல்வரே இன்றைக்கே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அதிமுக தொண்டர்கள் முதல் எதிர்கட்சித்தலைவர்கள் வரை ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கவலைப்பட்டு வருகின்றனர்.
அரசை வழி நடத்திச் செல்லும் அச்சாணியே ஆபத்தான நிலையில் இருப்பதால்தான் முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்னவானதோ ஏதானதோ என்ற கேள்விகள் பல தரப்பில் இருந்தும் எழுகிறது. தினம் தினம் பரவும் வதந்தி பலரது தூக்கத்தை கெடுக்கிறது.
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வரின் உடல்நிலை குறித்து இதுவரை பொதுமக்களுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 22 ம் தேதிமுதல் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை 14 நாட்களை கடந்து விட்டது. அப்பல்லோ மருத்துவமனை கொடுக்கும் அறிக்கை மட்டுமே ஊடகங்களில் வெளியாகிறது. ஜெயலலிதாவிற்கு என்ன ஆனது என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுவதற்குக் காரணம் தீயாக பரவும் வதந்திதான்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி நேற்று முன்தினம் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
டிராபிக்ராமசாமி தொடுத்த வழக்கில் நீதிபதிகள் எம்.என்.சுந்தேசன், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வின் முன் விசாரணை நடந்த போது நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கரிடம், "முதலமைச்சர் உடல்நலம் குறித்து ஏன் பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிப்பதில்லையே ஏன்?" என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், "முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதென்பது அவரது தனிப்பட்ட விஷயம். தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரக்கூடாது. அது, அவரது அந்தரங்கமான விஷயம்" என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், "உடல் நலக்குறைவு என்பது ஒருவரது அந்தரங்க விஷயம்தான் .ஆனால் ஜெயலலிதாவைப் பொருத்தவரை அவர் தமிழக முதலமைச்சர். அவரது உடல்நலம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் விரும்பத்தான் செய்வார்கள். அதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.
அதற்குப் பதிலளித்த அட்வகேட் ஜெனரல் "முதல்வரின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது அறிக்கைகளை ஊடகங்கள் வழியாக தெரியப்படுத்தி வருகிறது"என்றார்.

நீதிபதிகள் கேள்வி
அதற்கு நீதிபதிகள் "அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டாலும், தமிழக அரசு ஏன் இதுபற்றி ஒன்றும் கூறாமல் உள்ளது? அரசின் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள்? என்பதை மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை? தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுபற்றி பொதுமக்களுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை? முதல்வரின் உடல் நிலை பற்றிய தகவலைப்பெற்று அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்" என்று கூறினார்கள்.

அரசு விளக்கவேண்டும்
அதாவது அப்பல்லோ மருத்துவமனையே சொன்னாலும் கூட அரசும் இது பற்றி பேச வேண்டும் என்றார்கள் நீதிபதிகள். காரணம் அவர் தமிழக முதல்வர் என்பதனால்தான். இந்த வழக்கில் நீதிபதிகள் கேட்ட முக்கியமான இன்னொரு கேள்வி அரசின் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பதுதான். இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை 6ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர்.

தமிழகத்தின் பிரச்சினைகள்
காவிரி பிரச்சினையில் தொடங்கி, உள்ளாட்சித் தேர்தல் வரை இப்போது நெருக்கடிதான். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் அரசின் செயல்பாடுகள் சுணக்கமாகத்தான் இருக்கிறது. எனவேதான் சிங்கம் இளைத்தால் எலிகளுக்குக் கூட கொண்டாட்டம் என்பது போல காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவின் செயல்பாடுகள் இருக்கிறது.

வழிநடத்துவது யார்?
தமிழக அரசின் நிலை தற்போது துடுப்பு இல்லாத படகு போலவே இருக்கிறது. 'டிராபிக்' மனுவால் உயர்நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு ஜாம் ஆகி கிடக்கிறது அரசு. ஜெயலலிதா மீண்டு எழுந்து வந்தால் மட்டுமே அரசை சுறுசுறுப்பாக செயல்படுத்த முடியும். அதற்காகவாவது ஜெயலலிதா விரைந்து எழுந்து வரவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை. தமிழக அரசை யார் வழிநடத்துகிறார்கள் என்பது பற்றி நாளை தமிழக அரசு என்ன அறிக்கை அளிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications