ராணிப்பேட்டையில் வீட்டிலேயே சுயபிரசவம் பார்த்த இளம்பெண் பலி! குழந்தையும் உயிரிழந்த சோகம்
ராணிப்பேட்டை: வீட்டிலேயே சுய பிரசவம் பார்த்துக்கொண்ட இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்தின்போது பிறந்த பச்சிளம் குழந்தையும் உயிரிழந்திருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் ஜோதி எனும் இளம்பெண், 4வது பிரசவத்திற்கு தனது தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது பிரசவ வலி வந்திருக்கிறது. ஆனால் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் இருந்திருக்கின்றனர். ஜோதியும் சுயமாக பிரசவம் பார்த்திருக்கிறார். ஆனால், இந்த சம்பவத்தில் ஜோதியும், பச்சிளம் குழந்தையும் மயக்கமடைந்திருக்கின்றனர். இதை பார்த்த உறவினர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ராணிப்பேட்டை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயற்கை மருத்துவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை ஆதரிக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 2018 முதல் இந்த பிரச்சனை மக்கள் கவனத்திற்கு அதிகமாக வந்தது. தொடக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த இந்த சம்பவங்கள் திடீரென அதிகரிக்க தொடங்கின. வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும், மகளும் உயிரிழந்தனர். எனவே வீட்டில் பிரசவம் பார்ப்பதை தண்டனைக்குரிய குற்றம் என்று கடந்த 2018ல் தமிழக அரசு அறிவித்தது.
இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் இன்னும் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. கடந்த மாதம் 12ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலும் இதேபோல வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, மணமகன் குடும்பத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார்க்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அது உயிரிழந்திருக்கிறது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "வீட்டில் பிரசவம் பார்க்கும் பலரும் முன்வைக்கும் வாதம், நாங்கள் அந்த காலத்தில் வீட்டில்தானே குழந்தையை பெற்றுக்கொண்டோம், இப்போ மட்டும் எதற்கு மருத்துவமனை? என்கிறார்கள். உண்மைதான். அந்த காலத்தில் வீட்டில் பிரசவங்கள் நடந்தன. ஆனால் 100க்கு 20 பிரசவங்கள் மரணங்களில்தான் போய் முடியும். சில நேரங்களில் குழந்தை இறந்துவிடும். பல நேரங்களில் தாய் சேய் என இருவரும் உயிரிழப்பார்கள்.
இப்போது இந்த உயிரிழப்பு 1 லட்சத்திற்கு 50 என குறைந்திருக்கிறது. காரணம் மருத்துவமனைகள்தான். மருத்துவமனையிலும் இயற்கையில்தான் பிரசவம் நடக்கிறது. ஆனால், அது மருத்துவர்களின் மேற்பார்வையில் நடக்கிறது. சிக்கல் ஏதேனும் வந்தால் அதை மருத்துவர்கள் சரி செய்கிறார்கள். எனவே வீட்டு பிரசவத்தை நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications