திருச்சி சிவா பிறந்தநாள்! மாமாவுக்காக மாஸ் காட்டும் மருமகன்! கே.என்.நேரு படத்தை தவிர்த்த ஆதரவாளர்கள்
திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவளர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அமைச்சர் கே.என்.நேருவின் படத்தை தவிர்த்துள்ளனர்.
திமுகவின் டெல்லி முகமாக அறியப்படும் திருச்சி சிவா எம்.பி.யை பொறுத்தவரை அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் இலக்கியவாதியாகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட நாட்டின் முக்கியத்தலைவர்கள் பலருக்கும் பரிச்சயமானவர். இப்படி என்னதான் டெல்லியில் அவர் கொடிகட்டி பறந்தாலும் உள்ளூரான திருச்சியில் ஒரு வார்டு கவுன்சிலராக கூட தனது ஆதரவாளரை கொண்டு வர முடியாத இடத்தில் தான் இருக்கிறார்.

அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுக்கும் திருச்சி சிவாவுக்கு இடையேயான பனிப்போர் என்பது கடந்த கால் நூற்றாண்டு காலமாக இருந்து வரும் ஒன்று. இதனிடையே அண்மையில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தியதும் பிறகு முதல்வர் நேரடியாக தலையிட்டு திருச்சி சிவா வீட்டுக்கு போய் வருத்தம் தெரிவிக்குமாறு அமைச்சர் நேருவுக்கு கட் அண்ட் ரைட் உத்தரவு போட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் இன்று 70வது பிறந்தநாள் கொண்டாடும் திருச்சி சிவா தனக்கு வாழ்த்து தெரிவிக்க வரும் தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மதிய அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். திருச்சி சிவாவுக்காக அவரது மருமகன் கராத்தே முத்துக்குமார் களமிறங்கி மாமனாரின் பிறந்தநாளை தடபுடலாக ஏற்பாடு செய்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேருவுக்கு சற்றும் சளைக்காமல் போஸ்டர்கள், தோரணங்கள், கட்சிக்கொடிகள் எனக் கட்டி தனது மாமா திருச்சி சிவாவின் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறார் கராத்தே முத்துக்குமார். திருச்சி சிவா ஆதரவாளர்கள் அடித்துள்ள போஸ்டர்களில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி படம் மட்டும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications