சென்னை சூப்பர் கிங்ஸை வாங்குவதா? வருண் மணியனுக்கு மிரட்டல் - போலீசில் புகார்!
சென்னை: சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கக்கூடாது என தனக்கு தொலைபேசி மூலம் மர்மநபர்கள் மிரட்டல் விடுப்பதாக தயாரிப்பாளர் வருண்மணியன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாயை மூடிப் பேசவும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் வருண் மணியன். இவருக்கும் பிரபல நடிகை திரிஷாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் உள்ள சென்னை அணியை பட அதிபர் வருண் மணியன் வாங்க திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. ஆனால், அது உண்மையல்ல, வெறும் வதந்திதான் என வருண்மணியன் விளக்கமளித்தார்.

ஆனால், உரிய விளக்கம் அளித்த பிறகும் வருண் மணியனுக்கு மர்மநபர்கள் போன் வாயிலாக மிரட்டல் அளிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வருண் மணியன் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், ‘‘சென்னை அணியை விலைக்கு வாங்கக்கூடாது. வாங்கினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பலர் தொலைபேசி மூலம் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'', என வருண் மணியன் தெரிவித்துள்ளார்.
வருண் மணியனின் இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications