சீரியல் பாணியில் சித்தப்பாவை கொல்ல முயன்ற டிவி இயக்குநர் – போலீஸ் வலைவீச்சு
சென்னை: சென்னையில் சொத்து தகராறு காரணமாக சீரியல் பாணியில் சித்தப்பாவையே கூலி படையை ஏவி கொலை செய்ய முயன்ற டிவி இயக்குனரை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர். கூலிப்படையினர் 5 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம், விஜயா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபுசங்கர் (வயது 35). பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல் இயக்கியுள்ளார். இவருடைய சித்தப்பா நாகேந்திரன் (52) ஆவடியை அடுத்த திருநின்றவூரில் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் ஆவடி டேங்க் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

ரியல் எஸ்டேட் தொழில்
பிரபுசங்கரும், நாகேந்திரனும் சேர்ந்து சில வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் பிரபுசங்கரின் தந்தை சண்முகம் இறந்து விட்டார். இதனால் தனக்கு சொத்தை பிரித்து தர வேண்டும் என்று நாகேந்திரனிடம், பிரபுசங்கர் தகராறு செய்து வந்தார். மேலும் இது தொடர்பாக தன்னுடைய வீட்டிற்கு வருமாறு நாகேந்திரனை, பிரபுசங்கர் அழைத்தார்.
வீட்டுக்கு வந்த சித்தப்பா
இதனை நம்பிய நாகேந்திரம் மனைவி மற்றும் உறவினர்களுடன் வியாழக்கிழமை இரவு பிரபுசங்கர் வீட்டுக்கு காரில் வந்தார். பின்னர் அனைவரும் வீட்டின் மாடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். காரில் நாகேந்திரனின் டிரைவர் அப்பு மட்டும் அமர்ந்து இருந்தார்.
கூலிப்படை பதுங்கல்
அப்போது ஒரு காரில் மர்ம நபர்கள் கத்திகளை மறைத்து வைத்துக்கொண்டு வீட்டின் கீழே காத்திருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் அப்பு, ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று உணர்ந்து உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
5 பேர் கைது
இதையடுத்து வளசரவாக்கம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரையும் கைது செய்தனர். இதை அறிந்த பிரபுசங்கர், அவருடைய உறவினர் ராஜேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
லாக் அப் விசாரணை
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெய்கணேஷ் (25), ராமமூர்த்தி (26), பிரபாகரன் (30), மூர்த்தி (24), பாலாஜி (21) என்பதும் தெரியவந்தது.
டிவி இயக்குநர் தப்பி ஓட்டம்
நாகேந்திரனை கொலை செய்ய பிரபுசங்கர் அவர்களை ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள பிரபுசங்கர், ராஜேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டிவி சீரியல் பாணியில்
சீரியலில் வரும் சம்பவம் போல டிவி இயக்குநர் ஒருவர் சொத்துக்காக சொந்த சித்தப்பாவையே கொலை செய்ய கூலிப்படையை ஏவிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications