மாமல்லபுரம் கடலில் மூழ்கி இறந்து! ஈசிஆரில் பஸ்பமான இங்கிலாந்து தாய்! கண்ணீருடன் தாயகம் சென்ற மகன்
மாமல்லபுரம்: மகாபலிபுரம் கடலில் குளித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் ராட்சத அலையில் சிக்கி பலியான நிலையில் அவருடைய உடலை தாய்நாட்டுக்கு எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிற்பங்கள், கோயில்கள் உலக புகழ் பெற்றவை ஆகும். இங்கு கடற்கரையும் இருப்பதால் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பலர் மகாபலிபுரத்திற்கு வருவது வழக்கம்.

அது மட்டுமல்லாமல் கோடை விடுமுறை காலங்களில் நிறைய பேர் மகாபலிபுரம் கடற்கரையில் குளித்து வெப்பத்தை தணித்து கொள்வர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையால் இங்கு ஹோட்டல், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை களைகட்டும்.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் மாமல்லபுரத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வருகை தந்தனர். அதில் லண்டனில் உள்ள அரசு மருத்துவமனையில் மசாஜ் தெரபி நிபுணராக பணியாற்றி வந்தவர் பிரிஜெட் டைலர் (84). இவருடைய மகன் ரூபர்ட்டைலர் (58).
இவர்கள் இருவரும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தாயும் மகனும் தங்கியிருந்தனர். கடந்த 12 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சிற்பங்களை சுற்றி பார்த்தனர்.
அங்கு நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டு சிற்பங்கள் குறித்து அங்கிருந்த வழிகாட்டியிடம் கேட்டுத் தெரிந்து வியப்பில் ஆழ்ந்தனர். இதையடுத்து மதிய உணவை சாப்பிட்டு விட்டு இருவரும் அப்படியே காற்றாட நடந்து கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடற்கரை கோயிலை பார்த்தனர்.
இதையடுத்து மாமல்லபுரம் கடலில் இருவரும் குளித்தனர். அப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்ததாக தெரிகிறது. ஆனாலும் மூதாட்டி பிரிஜெட் டைலர் சற்றும் பயமே இல்லாமல் பல அலைகளில் சென்று குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.
இதை அருகில் இருந்து பார்த்த அவரது மகன் ரூபர்ட் டைலர் தனது தாயை காப்பாற்ற போராடினார். ஆனால் சில நொடிகளில் மூதாட்டி கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. அங்கிருந்தவர்களும் ரூபர்ட்டை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து அந்த பகுதியில் மூதாட்டியின் உடல் கரை ஒதுங்கியது.
தகவலறிந்து அங்கு விரைந்த மாமல்லபுரம் போலீஸார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து சுற்றுலா பயணி கடலில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டு தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இறந்த உடலை தூதரகத்தின் அனுமதியுடன் இங்கிலாந்து கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த நடைமுறைகளை செய்ய ஒரு வார காலம் ஆகும் என்பதால் தனது தாயின் உடலுக்கு தமிழகத்திலேயே இறுதிச் சடங்குகளை நடத்த போலீஸாரிடம் கேட்டுக் கொண்டார் ரூபர்ட். அவரது கோரிக்கையின் படி செங்கல்பட்டிலேயே பிரிஜெட்டின் உடலுக்கு ரூபர்ட் எரியூட்டினார். இதையடுத்து கண்ணீருடன் இந்தியாவிலிருந்து கிளம்பி தாயகம் சென்றுள்ளார்.
பொதுவாக மாமல்லபுரம் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பார்கள். அதிலும் அமாவாசை முடிந்த 4 ஆவது நாள் கடல் அலையின் சீற்றம் அதிகமாகவே இருந்திருக்கும். இதனால்தான் ஒரு கட்டத்திற்கு மேல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனாலும் சிலர் எச்சரிக்கைகளை கேட்காமல் குளிக்க சென்று இப்படி சிக்கிக் கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications