காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு அலுவலகங்களின் மின்சாரத்தைத் துண்டியுங்கள்!: வைகோ
தஞ்சாவூர்: காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள். அலுவலகங்களைப் பூட்டுங்கள். என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்டா பகுதி விவசாயிகளை காப்பதற்கு டிசம்பர் 12 முதல் 22 வரை மதிமுக பொதுச்செயலாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் இப்படி ஓரணியில் திரண்டு நின்றால், கர்நாடகத்துக்காரனின் அக்கிரமத்தை உடைத்துத் தூள் தூளாக்கி விடலாம்.

எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்ற இந்த நெல்வயல்களைப் பார்க்கின்றபோது, இவை எல்லாம் பட்டுப் போய், பஞ்சப் பிரதேசம் ஆகிவிடுமோ இந்தத் தஞ்சை? என்ற கவலை என் மனதை அழுத்திக்கொண்டு இருக்கின்றது. நான் இந்தத் தஞ்சை மண்ணின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவன்.
ஆபத்து நம்மைச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றது. முன்பு கர்நாடகம் அணைகள் கட்டியபோது நாம் தடுக்கத் தவறி விட்டோம். சென்றது இனி மீளாது. இன்று நடக்கப் போவது என்ன? நாளை செய்ய வேண்டியது என்ன? அதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே அணை
அங்கே மேலும் இரண்டு அணைகளைக் கட்டி, பதினோரு இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் புதிதாகப் பாசன வசதிகள் செய்யப் போகிறான். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றம் அமைத்த நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிராக, இந்த அணைகளைக் கட்டப் போகிறான்.

தமிழகத்திற்கு தண்ணீர்
இந்த இரண்டு அணைகளைக் கட்டுவதோடு மட்டும் அல்ல; கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் தவிர இன்னும் ஒரு நான்கு அணைகள் கட்டப் போகிறான். இப்போது பெருமழை பெய்தால்தான் நமது மேட்டூருக்குத் தண்ணீர் வருகின்றது. இனி அது வராது. ஒரு சொட்டுத் தண்ணீரும் நமக்கு வர விடாமல் தடுத்து விடுவார்கள். நமது குறுவைக்கோ, தாளடிக்கோ, சம்பாவுக்கு எதற்கும் தண்ணீர் கிடைக்காது.
தமிழகத்தின் பிரச்சினை

இது தஞ்சைத் தரணியின் பிரச்சினை அல்ல;
தாய்த் தமிழகத்தின் பிரச்சினை. குடகு நமக்கு உரிய பகுதி. அதைப் பறிகொடுத்து விட்டோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் அனுபவித்து வருகின்ற உரிமையை இழந்தால், நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வாழ்வது எப்படி? 12 மாவட்டங்கள் பட்டுப் போகும்; 5 கோடி மக்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்காது. 3 கோடிப் பேர் விவசாயம் செய்ய முடியாது. எனவே, இது தஞ்சைத் தரணியின் பிரச்சினை அல்ல; தாய்த் தமிழகத்தின் பிரச்சினை. இது உங்கள் பிரச்சினை அல்ல; ஏழரைக் கோடித் தமிழர்களின் பிரச்சினை.
எனவே, ஏழரைக் கோடித் தமிழர்களும் ஒன்றாகக் கிளர்ந்து எழாவிடில் இந்த அக்கிரமத்தைத் தடுக்க முடியாது.
மத்திய அரசு நீதி
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் குறுக்கே மூன்று அணைகளைக் கட்டினான் கர்நாடகத்துக்காரன். புலிக்கொடி ஏந்திய உங்கள் மூதாதையர்கள் படையெடுத்துச் சென்று, அவற்றை உடைத்து நொறுக்கி விட்டு வந்தார்கள். இப்போது நாம் அப்படிச் செய்ய முடியாது. இந்தியா என்ற அமைப்பிற்குள் நாம் இப்போது கட்டுப்பட்டு இருக்கின்றோம். மத்திய அரசு நீதி வழங்க வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம்
எனக்கு ஏற்பட்டு இருக்கின்ற வருத்தம் என்ன தெரியுமா? ஆறு மாதங்கள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியத்தை நரேந்திர மோடி அரசு அமைக்கவில்லை. கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, நாங்கள் அணையைக் கட்டுவோம் என்று மூன்று நாள்களுக்கு முன்னர் கூறி இருக்கின்றார். அதை யாரும் தடுக்க முடியாது. மத்திய அரசு எங்களுக்கு அனுமதி கொடுக்கும். எங்கள் ஊர் வழியாகப் போகின்ற காவிரி, எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்கிறார்.
வன்முறை சரியாகாது
அதைத் தடுக்க என்ன வழி? வன்முறையில் ஈடுபட்டுப் பிரச்சினை தீராது. பத்துப் பேருந்துகள் மீது கற்களை எறிந்தால் பிரச்சினை தீராது. கடைகளை அடைத்து விட்டால் பிரச்சினை தீராது. இத்தகைய நடவடிக்கைகளால் நமது மக்களுக்குத்தான் இழப்புகள் ஏற்படுமே தவிர, நம்முடைய காரியம் நடக்காது.
எனவே ஒட்டுமொத்தத் தமிழகமும் கிளர்ந்து எழ வேண்டும்.
சகோதரி ஜெயலலிதா
இந்தக் காவிரி பிரச்சினையை தீர்க்க தமிழகத்திற்காக, முன்னாள் முதல் அமைச்சர், இன்றைக்கு இந்த அரசை இயக்கிக் கொண்டு இருக்கின்ற சகோதரி ஜெயலலிதா அவர்களை வேண்டுகிறேன்.
மாண்புமிகு முதல் அமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களை அழைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொல்லுங்கள். உள்ளூர் விவகாரங்கள் எதையும் அதில் பேச வேண்டாம். காவிரிப் பிரச்சினையில் இப்போது என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும்.
அனைத்து கட்சிக்கூட்டம்
யாரும், யாரையும் குற்றம் குறை கூறக் கூடாது. நீ அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்ற லாவணி தேவை இல்லை. குழாயடிச் சண்டை கூடாது. ஒரே முடிவு எடுப்போம். ஒரு குழுவை அமைத்து, பிரதமரைச் சந்தித்து, அணையைக் கட்ட அனுமதிக்காதீர்கள்; காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமையுங்கள் என்று சொல்லுவோம்.
மத்திய அரசு அலுவலகங்கள்
மத்தியஅரசு எதற்கும் சரிப்பட்டு வரவில்லையா, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள். அலுவலகங்களைப் பூட்டுங்கள். அவர்கள் மத்திய ரிசர்வ் படையைக் கொண்டு வரட்டும். அப்போது நாங்கள் எல்லோரும் உங்கள் பின்னால் நிற்போம். (கைதட்டல்).
அதிமுகவிற்கு பிரசாரம் செய்வேன்
இப்படிச் செய்தால், 356 ஆவது பிரிவைப் பயன்படுத்தி அண்ணா தி.மு.க. அரசைக் கலைத்து விடுவார்களே என்று சிலர் நினைக்கலாம். அப்படி ஒரு நிலைமை வந்தால், அதற்குப் பிறகு தேர்தலில்90 விழுக்காடு இடங்களை நீங்கள்தான் கைப்பற்றுவீர்கள். வேறு யாரும் வெற்றி பெற்று விட முடியாது. இதனால் உங்கள் அரசு கவிழ்ந்தால், நான் ஊர் ஊராகச் சென்று, தெருத்தெருவாகச் சென்று உங்களுக்காகப் பிரச்சாரம் செய்வேன்.
தேர்தலில் நிற்க மாட்டேன்
நான் தேர்தலில் நிற்க மாட்டேன். ஏதேனும் குறுக்குச்சால் ஓட்டி, எங்களுக்குச் சில எம்.எல்.ஏ.பதவிகளை வாங்கி விட வேண்டும் என்ற கனவிலும் நான் இல்லை. மேலும் டெல்லிக்குப் போகின்ற குழுவில் எங்கள் கட்சியைக் கூடச் சேர்க்க வேண்டாம். ஏனென்றால், எங்கள் கட்சிக்குச் சட்டமன்றத்தில் இடம் கிடையாது. மேலும் இங்கே பத்துப் பேர் சேர்ந்து கொண்டு ஒரு கட்சியைப் பதிவு செய்து வைத்து இருக்கின்றார்கள். தமிழகத்தில் மட்டும் 300 கட்சிகள் உள்ளன. எனவே, தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சிகளை மட்டும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள். எங்களுக்கு அந்த அங்கீகாரமும் கிடையாது. நம்முடைய கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லையா? அதன் பிறகு நான் சொன்னதைச் செய்யுங்கள். இது ஒன்றுதான் வழி என்று அதிரடியாக பேசினார் வைகோ.












Click it and Unblock the Notifications