விஜயகாந்தை மீண்டும் அழைக்கிறோம்: வைகோ
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெளிவாக அறிவித்த பின்னரும்,
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த விஜயகாந்த் எங்களுடன் கைகோர்ப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்காக மக்கள் நல கூட்டணி விடுத்த அழைப்பு இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தனித்துப் போட்டி என விஜயகாந்த் அறிவித்துவிட்டார். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் சென்னையில் கூடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினோம். ஏற்கனவே விஜயகாந்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்து இருந்தோம். இன்றைய கூட்டத்தின் மூலம் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த விஜயகாந்த் எங்களுடன் கைகோர்ப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் மீது தாக்கு
மக்கள் நலக்கூட்டணி அதிமுகவின் பினாமி என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வைகோ,
இப்போது விஜயகாந்த் திமுகவிற்கு கதவை மூடிவிட்டார். அந்த எரிச்சலில் மற்றவர்கள் மீது ஸ்டாலின் பாய்கிறார் ஸ்டாலின்தான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பினாமி போல் இருக்கிறார். நாங்கள் அரசியலில் கொள்கை குறிக்கோள்களுடன் செயல்படுகிறோம். எனவே ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்.

அதிமுக அரசின் குறைகள்
நான் மேடைகளில் ஸ்டாலினைத் தான் அதிகம் விமர்சிக்கிறேன் என்றும் அ.தி.மு.க.வை விமர்சிக்கவில்லை என்றும் கூறுவது தவறு.
எனது எல்லா பொதுக் கூட்டங்களிலும் அ.தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி 30 நிமிடம் பேசுகிறேன். ஆனால் ஸ்டாலினைப் பற்றி 3 நிமிடம் மட்டுமே பேசுகிறேன். எனது கூட்டங்களுக்கு வந்து பார்த்தால் தெரியும்.

மாற்றம் வரும்
இப்போது மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவையும், அதிமுகவையும் மக்கள் வெறுக்கிறார்கள். 1967-ல் மக்கள் முதல் முறையாக மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அது போன்ற மாற்றத்தை இப்போது கொண்டு வருவோம்.

நம்பிக்கை இருக்கிறது
மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையேயும், தொண்டர்கள் மத்தியிலும் பரஸ்பரம் நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். நல்ல கூட்டணி அமைத்து இருக்கிறோம். இதுபோன்ற கூட்டணி தமிழக அரசியலில பார்த்தது இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இறுதியில் நல்ல முடிவு வெளியாகும்.

ஊழல் திமுக
காரணம் 2011ம் ஆண்டு தேர்தலில் அப்போதைய ஊழல் நிறைந்த திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் விஜயகாந்த் கைகோர்த்தார். 2011 தேர்தலின் போது மக்களும் திமுகவுக்கு எதிரான நிலை கொண்டு இருந்தனர். அந்த நிலை இப்போதும் கூட மாறவில்லை அப்படி இருக்கும் போது திமுக உடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என்றே நாங்கள் உறுதியாக நம்பினோம். அதுபோலவே நடந்துள்ளது.

மீண்டும் அழைப்பு
ஏற்கனவே விஜயகாந்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்து இருந்தோம். இன்றைய கூட்டத்தின் மூலம் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த விஜயகாந்த் எங்களுடன் கைகோர்ப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications