பாஜக கூட்டணிக்கு "டாட்டா" காட்டுகிறார் வைகோ!
சென்னை: அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணிக்கான "வரைவு டிராப்ட்" கிட்டத்தட்ட ரெடியாகி விட்டதாகவே தெரிகிறது.
திமுக - பாமக மற்றும் மதிமுக ஆகியவை கை கோர்க்கவுள்ளது முதல் கட்டமாக உறுதியாகியுள்ளது. டாக்டர் ராமதாஸ் பேத்தி- பேரன் திருமணத்தை வைத்து இந்த கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டு விட்டது.
மேலும் கடந்தலோக்சபா தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்தித்த மதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

முதல் ஆளாக பாஜகவிடம் போன வைகோ
லோக்சபா தேர்தலில் பாஜக அமைத்த மெகா கூட்டணியில் முதல் நபராகப் போய்ச் சேர்ந்தவர் வைகோதான்.

எல்லாமே ஏமாற்றம்
அவர் பாஜகவிடம் நிறைய எதிர்பார்த்திருந்தார். இலங்கையுடன் உறவைத் துண்டிப்பது, இலங்கைக்கு நெருக்கடி தருவது, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றில் அவர் நிறைய எதிர்பார்த்திருந்தார். ஆனால் கிடைத்தது பெரும் ஏமாற்றமே.

ராஜபக்சேவுடன் குலாவும் பாஜக தலைவர்கள்
எடுத்த எடுப்பிலேயே வைகோ முகத்தில் கரியைப் பூசி விட்டார் பிரதமர் மோடி. பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு கொடுத்த செயல் வைகோவை மட்டுமல்ல அவரது கூட்டணிக் கட்சியினரையும் கூட கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் வைகோ மட்டுமே அதை கடுமையாக எதிர்த்தார். மற்றவர்கள் பூசி மெழுகினார்கள்.

மீனவர் பிரச்சினையிலும் ஏமாற்றம்
இதேபோல தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் வைகோவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர், சிறை பிடிக்கப்பட்டனர்.

சு.சாமியைத் தட்டிக் கேட்காத பாஜக
அதை விட முக்கியமாக சுப்பிரமணியம் சாமியின் அடாவடியான போக்கை பாஜக மேலிடம் சற்றும் கண்டிக்கவில்லை, அவரை தட்டி வைக்கவும் இல்லை. மாறாக கண்டு கொள்ளாமல் விட்டது வைகோவை மேலும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

நெருங்கி வந்த திமுக
இப்படி பாஜக மீது கடும் அதிருப்தியுடன் இருந்து வந்த வைகோவின் நிலையைப் பார்த்த திமுக தானாக முன்வந்து நட்பு பாராட்டத் தொடங்கியது. வருகிற சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணியை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. எனவே பாஜக கூட்டணியை உடைத்து அதில் உள்ள கட்சிகளை இங்கு கொண்டு வரும் வேலையில் திமுக இறங்கியுள்ளது.

பரஸ்பரம் புகழாரம்
இதையடுத்து வைகோவை கருணாநிதியும், கருணாநிதியை வைகோவும் புகழ ஆரம்பித்தனர். அப்போதே தெரிந்து விட்டது வைகோ கேம்ப் மாறப் போகிறார் என்பது. இதோ இப்போது ராமதாஸ் பேத்தி - பேரன் கல்யாண வைபவத்தை வைத்து திமுகவுடன் தான் கூட்டணி சேரப் போவதை சொல்லாமல் சொல்லி விட்டார் வைகோ.

ஸ்டாலினுடன் சந்திப்பு
உண்மையில் திமுகவிலிருந்து வைகோ வெளியே காரணமே மு.க.ஸ்டாலினுக்கு இடையூறாக இருக்கிறார் என்பதுதான். ஆனால் நேற்று ஸ்டாலினும், வைகோவும் சிரித்தபடி, கை கோர்த்தபடி பேசி ராசியாகி விட்டனர்.

2வது முறையாக
வைகோ, திமுகவுடன் கூட்டணி சேருவது என்பது புதிதல்ல. முன்பு இப்படித்தான் ஜெயலலிதா ஆட்சியில், பொடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் திமுகவுடன் கூட்டணி வைத்தார். திமுகவை விட்டு வெளியேறி புதுக் கட்சி ஆரம்பித்த பின்னர் அவர் திமுகவுடன் வைத்த முதல் கூட்டணி அதுதான். இப்போது 2வது முறையாக இணையவுள்ளார்.

எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமுக கூட்டணியில் மதிமுக இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டசபைத் தேர்தலுக்கு நெருக்கத்தில்தான் வெளியிடப்படும். அதுவரை ஒவ்வொரு கட்சியாக சேர்த்துக் கொண்டு வருவார்கள். இப்போது மதிமுக, பாமக இணைந்துள்ளன. அடுத்த யார் வரப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் வைகோவின் காவிக் கூட்டணி சீக்கிரமே முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications