வால்பாறை விபத்து எப்படி? 13லிருந்து 9வதில் விழுந்ததற்கு பதில், 8வது கொண்டை ஊசியில் விழுந்திருந்தால்?

Subscribe to Oneindia Tamil

வால்பாறை: தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கோடைகால சுற்றுலா தலங்களில் ஒன்றான வால்பாறையில் மலையில் இருந்து கீழே இறங்கிய கேரள சுற்றுலா பயணிகள் வேன், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அதேபோல் 13வது கொண்டை ஊசி வளைவில் இருந்து, 9-வது கொண்டை ஊசி வளைவில் நின்ற வேன், 8-வது கொண்டை ஊசி வளைவில் மட்டும் உருண்டு விழுந்து இருந்தால் உயிரிழப்பு மேலும் அதிகரித்து இருக்கும் என்கிறார்கள்.. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கோடைவாசல் தலங்களில் ஒன்று வால்பாறை.. ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக இருக்கிறது. இந்த சுற்றுலா தலம் கேரள மாநிலத்தை ஒட்டியிருப்பதால் கேரளாவில் இருந்தும் பலர் தினமும் சுற்றுலா வருகிறார்கள்.

v

அப்படித்தான் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா அருகே நரிப்பற்று அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 13 பேர் சுற்றுலாவாக வால்பாறைக்கு கிளம்ப முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14-ந் தேதி சித்திரை விசு பண்டிகையையொட்டி கேரளாவில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.

சுற்றுலா வேன்

பல்வேறு கனவுகளுடன் ஜாலியாக வால்பாறையில் பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்த ஆசிரியர்கள், நேற்று வால்பாறையிலிருந்து கேரளா செல்வதற்கு முடிவு செய்தார்கள். வால்பாறையிலிருந்து சுற்றுலா வேனில் பொள்ளாச்சி நோக்கி வந்து மலையில் இறங்கி கொண்டிருந்தது. வேனை 21 வயதாகும் முகமது பாசித் என்பவர் ஓட்டி சென்றார்.

மாலை 5 மணிக்கு நடந்தது

மாலை 5 மணி அளவில் வேனில் மகிழ்ச்சியாக பேசி சிரித்தபடி ஆசிரியர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் தான் விபரீதம் நடந்தது. பொதுவாக மலைப்பாதையில ஏறுவதைவிட வாகனங்கள் இறங்குவது தான் சவாலானது. அதிவேகத்தில் வாகனங்களை இறக்கும் போது, கவனமாக இருக்காவிட்டால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்துவிடும். அதாவது சிறு கவனக்குறைவு அல்லது சிறு தவறு கட்டுப்பாட்டை இழக்க வைத்துவிடும்..

கட்டுப்பாட்டை இழந்த வேன்

அப்படித்தான் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் மாலை 5.15 மணியளவில் வந்தபோது நடந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சுமார் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 13-வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த வேன் மலையில் உருண்டு 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்து விழுந்தது. இந்த விபத்தில் சுற்றுலா வேன் நொறுங்கியது. மேலும் அதில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதைக் கண்ட வாகன ஓட்டிகள், காடம்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வால்பாறை டிஎஸ்பி பவித்ரா தலைமையில் போலீசார், வனத்துறையினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Valparai accident What if the vehicle had plunged at the 8th hairpin bend instead of the 9th

இறந்தவர்களில் 7 பேர் ஆசிரியர்கள்

இந்த விபத்தில் ஒரு சிறுவன், 7 பெண்கள் மற்றும் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர். அவர்களது பெயர்கள் அஜீதா (54), ரம்லா (52), சுஹ்ரா (43), ஆஷா (41), மஜீத் (43), சஜிதா (45), ஷகிலா (37), ருபியா (39), ஹிஷாம் (12) ஆகும். மேலும் நவுசாத் (39), ஸபீன் (10), ஷஹதின் (11), டிரைவர் முகமது பாசித் ஆகியோர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களில் 7 பெண்களும் ஆசிரியர்கள் ஆவார்.

8வது கொண்டை ஊசியில் விழுந்து இருந்தால்

இந்த விபத்து நடந்த போது, உருண்டு விழுந்த வேன் 9-வது கொண்டை ஊசி வளைவில் நின்றது. 8-வது கொண்டை ஊசி வளைவில் உருண்டு விழுந்து இருந்தால் உயிரிழப்பு மேலும் அதிகரித்து இருக்கும் என்று சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள். ஏனெனில் வால்பாறை மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவுக்கும் 8-வது வளைவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதி மிகவும் செங்குத்தானது ஆகும். 13-வது வளைவில் இருந்து உருளத் தொடங்கிய வேன், 9-வது வளைவில் நின்றதால் ஒரு தற்காலிகத் தடுப்பு கிடைத்தது. ஒருவேளை அது நிற்காமல் 8-வது வளைவை நோக்கிச் சென்றிருந்தால், வேகம் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கும்.

வேன் தரைமட்டம் ஆகியிருக்கும்

9-வது வளைவுக்குக் கீழே உள்ள பள்ளம் இன்னும் ஆழமானது மட்டுமல்ல, அங்கு பாறைகளும் மரங்களும் அதிகம் ஆகும். 13-ல் இருந்து 9-க்கு விழுந்தபோதே வேன் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இன்னும் ஒரு அடுக்கு கீழே 8-வது வளைவுக்குச் சென்றிருந்தால், வேன் தரைமட்டமாகி மீட்புப் பணிகளே செய்ய முடியாத அளவுக்குச் சிதைந்திருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும்..

மீட்பு பணியும் கடினம்

வால்பாறையில் 9-வது கொண்டை ஊசி வளைவு என்பது ஓரளவு சமதளத்தைக் கொண்ட பகுதியாகும். அங்கிருந்து காயமடைந்தவர்களை மீட்பது எளிதாக இருந்தது. ஆனால், 8-வது வளைவுக்கும் 9-வது வளைவுக்கும் இடைப்பட்ட பகுதி மிகவும் அடர்த்தியான காடு மற்றும் செங்குத்தான பாறை இடுக்குகளைக் கொண்டிருக்கிறது. அங்கே வேன் விழுந்திருந்தால், கிரேன் அல்லது மீட்புக் குழுவினர் உள்ளே இறங்குவது சாத்தியமில்லாமல் போயிருக்கும். இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டவர்களைக் கூடக் காப்பாற்றுவதற்கு கூட கடும் சவாலை சந்திக்க வேண்டியதிருக்கும்.


கொடைக்கானல் ஊட்டி செல்வோர் கவனிக்க

கோடைக்காலம் என்பதால் கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, ஏற்காடு, மூணாறு உள்ளிட்ட மலைப்பாதைகளுக்கு அதிகமானோர் சுற்றுலா செல்வார்கள். குறிப்பாக வால்பாறை போன்ற கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த பாதைகளில் கீழே இறங்கும்போது வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டியவற்றை பார்ப்போம். இதில் ஒரு தவறு தான் விபத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.


பலரும் செய்யும் தவறு

கீழே இறங்கும்போது பலரும் செய்யும் தவறு, கியரை நியூட்ரலில் போடுவது அல்லது கிளட்ச்சை அமுக்கிக்கொண்டு பிரேக் பிடிப்பது. இது மிகவும் ஆபத்தானது. எந்தக் கியரில் மலை ஏறினீர்களோ, அதே கியரில் தான் கீழே இறங்க வேண்டும் (பெரும்பாலும் 2-வது அல்லது 3-வது கியர்).இதனால் இன்ஜின் தானாகவே வேகத்தைக் கட்டுப்படுத்தும். இதற்குப் பெயர்தான் இன்ஜின் பிரேக்கிங்.

பிரேக்கை தொடர்ச்சியாக மிதித்தால்

தொடர்ச்சியாகப் பிரேக்கை மிதித்துக்கொண்டே இருந்தால், பிரேக் லைனர்கள் சூடாகி 'பிரேக் ஃபேட்' என்ற நிலை ஏற்படும். இதனால் ஒரு கட்டத்தில் பிரேக் சுத்தமாக வேலை செய்யாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இன்ஜின் பிரேக்கிங்கைப் பயன்படுத்தினால், பிரேக் மீதான அழுத்தம் குறைந்து அது பாதுகாப்பாக இருக்கும். வளைவுக்குள் நுழைவதற்கு முன்பே வேகத்தைக் குறைத்துவிட வேண்டும். வளைவின் நடுவில் பிரேக் பிடிப்பது வாகனத்தைச் சரியச் செய்யும் .

ஹாரன் அடிக்க வேண்டும்

வளைவுகளில் திரும்பும்போது உங்கள் பக்கத்து லேனில் மட்டுமே செல்லுங்கள். எதிரே வரும் வாகனத்திற்குப் போதிய இடம் விடுங்கள். மலைப்பாதைகளில் 'பிளைண்ட் ஸ்பாட்' அதிகம். அதாவது வளைவுக்கு அந்தப் பக்கம் என்ன வருகிறது என்று தெரியாது. எனவே, ஒவ்வொரு வளைவிலும் கட்டாயம் ஹாரன் அடிக்க வேண்டும். குறிப்பாக பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தை வைத்து எதிரே வரும் வாகனத்தைக் கணிக்கலாம்.

டயர்களை முதலில் பாருங்கள்

மலைப்பாதைகளில் கீழே இறங்கும் வாகனங்கள், மேலே ஏறி வரும் வாகனங்களுக்கு வழி விட வேண்டும். ஏனென்றால், ஒரு வாகனத்தை மேட்டில் நிறுத்தி மீண்டும் எடுப்பது கடினம். ஆனால் இறங்கும் வாகனத்தை நிறுத்தி எடுப்பது எளிது. பயணத்திற்கு முன்பே டயர்களில் போதிய காற்று இருப்பதையும், டயர்கள் தேய்மானம் அடையாமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். மழை நேரமாக இருந்தால் வேகம் இன்னும் குறைவாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+