இன்று “சர்வதேச மகளிர் தினம்”- கொண்டாடப்படும் பெண்களுக்கு தமிழகத் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மகளிருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா:
தாய்மைக்கு இலக்கணமாய் திகழும் பெண்கள், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி:
நாடாளுமன்ற, சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டும்:

மதிமுக பொதுசெயலாளர் வைகோ:
மது அரக்கனின் தாக்குதலால் பெண்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிர வைக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். தாயாக, சகோதரிகளாக, மகளாகப் பாவிக்கும் நிலை வர வேண்டும்.

கவர்னர் ரோசைய்யா:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் பெண்கள் உள்ளனர். வீடு மற்றும் சமுதாயத்தில் அவர்கள்தான் தூண்கள். குடும்பத்திலும், நாட்டிலும் அவர்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 37,577 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம் மது தான். குடும்பங்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்து கொண்டு, அரசே மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண் பாடுகளின் உச்சமாகவே இருக்கும். தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண் களின் விருப்பமும் பா.ம.க. ஆட்சி என்ற கருவி மூலம் நிறைவேறும். இப்படி ஒரு உன்னத சாதனையை படைப்பதற்காக கடுமையாக உழைக்க இந்நாளில் உறுதி யேற்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
மனித குலத்தில் ஆண்களும், பெண்களும் சரிசமமாக இருக்கிறார்கள். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல உருண்டோடியும், பெண் களுக்குரிய உரிமையும், முக்கியத்துவமும் இதுவரையிலும் அவர்களுக்கு முழுமையாக கிடைத்தபாடில்லை. தமிழகத்தில் மதுவால் கணவனையும், மகனையும், சகோதரனையும் இழந்ததாய்மார்களும், சகோதரிகளும் மதுவின் கொடுமையை தினந்தோறும் அனுபவித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை தர வேண்டும் என்று சட்டம் நிறைவேற்ற அன்னை சோனியா காந்தி எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிவார்கள். மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேற்றுவதற்கு தமது ஆட்சியை பணயம் வைத்து செயல்படுத்தியவர் அன்னை சோனியா. சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றங்களிலிருந்து பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் ஆணாதிக்க சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். மதுவின் பிடியிலிருந்து தமிழக பெண்களை மீட்டெடுத்து, பாதுகாக்க உலக மகளிர் தினத்தில் சூளுரை மேற்கொள்வோம். இதுவே உலக மகளிர் தின செய்தியாக கூற விரும்பு கிறேன். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்:
மகளிர் நலன் காக்கவும், வளர்க்கவும் நாம் பாடுபட வேண்டும். மேலும் நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது மகளிருக்கு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு தரும் 108 ஆவது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஆண்டுதோறும் மகளிர் நலன் பேணும் வகையில் மகளிருக்கான தனி பட்ஜெட் வெளியிட வேண்டும்; நீதிபதிகள், துணை வேந்தர்கள், தன்னாட்சி உரிமைபெற்ற ஆணையங்களில் மகளிர் போதிய அளவில் இடம் பெற வழிகாண வேண்டும்; ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், நாடாளு மன்ற உறுப்பினரும் தனது தொகுதியில் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள மகளிர் நலனுக்கும், வளத்திற்கும், உயர்வுக்கும் பாடுபட வேண்டும்.

புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம்:
ஒவ்வொரு ஆணின் முன்னேற்றத்திற்கும் பின்னால் ஓர் பெண் இருக்கின்றாள் என்பார்கள். வீட்டின் நலத்திற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்களின் பங்களிப்பு ஆணுக்கு சரிநிகர் சமானமாய் உள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட பெண்கள், மென்மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ‘‘சர்வதேச பெண்கள் தின'' நல்வாழ்த்துக்களை புதிய நீதிக்கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications