கொலை மிரட்டல் வருது! கண் கலங்கிய விசிக பெண் மாவட்டச் செயலாளர்! நிர்வாகிகளால் திருமாவுக்கு தலைவலி!
கள்ளக்குறிச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் மாவட்டச் செயலாளர் ஒருவர், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி மேடையில் கண்ணீர் விட்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. .
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் பட்டியலை அண்மையில் வெளியிட்டார் திருமாவளவன். எவ்வித சிபாரிசையும் ஏற்காமல் முடிந்தவரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத நபர்களை நிர்வாகிகளாக நியமித்தார்.

இதனிடையே பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த நிர்வாகிகள் புதிதாக பதவிக்கு வந்துள்ளவர்களுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அரசியலிலும், அரசியல் கட்சிகளிலும் இதெல்லாம் சகஜம் என்றாலும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் விசிக பெண் மாவட்டச் செயலாளருக்கு கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் நிலைமை மோசமாகியுள்ளது.
வேல் பழனியம்மாள் என்பவர் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட விசிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்டச் செயலாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழுததுடன் தனது கணவர் பாதுகாப்புடன் தாம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
தன்னிடம் பேசக்கூடாது, தாம் சொல்வதை கேட்கக்கூடாது என நிர்வாகிகளை சிலர் தடுத்து வருவதாக குமுறினார். இதேபோல் தான் பல மாவட்டங்களிலும் விசிக புதிய நிர்வாகிகள் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இதனிடையே இந்தப் பிரச்சனை விசிக தலைவர் திருமாவளவனுக்கு புது தலைவலியை கொடுத்திருக்கிறது.
அதிருப்தி நிர்வாகிகளை சரிகட்டும் பணி தொடங்கியுள்ளது. பதவி கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் வருந்தத் தேவையில்லை என்றும் விரைவில் உரிய அங்கீகாரம் தரப்படும் எனவும் சமாதானப் படலம் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications