அஸ்ஸாமில் தமிழ் ஐபிஎஸ் அதிகாரி கைது கொடூரம்! அக்கிரமம்!தமிழக அரசு தலையிட வேல்முருகன் வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அசாமில் தமிழரான ஐபிஎஸ் அதிகாரி ராஜ மார்த்தாண்டன் கைது செய்யப்பட்டது கொடூரம், அக்கிரமம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனையில் தமிழக அரசுதலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அஸ்ஸாம் -மேகாலயா பணிப் பொறுப்பில் இருந்து வரும் 2006ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரி ராஜமார்த்தாண்டன். இவர் தமிழராவார். உளவுத் துறை சிறப்பு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பிரபல லூயிஸ் பெர்கர் லஞ்ச-ஊழல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்தார். அதில் தெமாஜி மாவட்டம், சிலாப்பதர் நகரில் உள்ள அகில அஸ்ஸாம் மாணவர் சங்க அலுவலகம் கடந்த மார்ச் 6ஆம் தேதியன்று தாக்கப்பட்ட வழக்கும் ஒன்று.

சுபோத் பிஸ்வாஸ் கைது

சுபோத் பிஸ்வாஸ் கைது

இந்த வழக்கை விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராகவும் ராஜமார்த்தாண்டன் அஸ்ஸாம் அரசால் நியமிக்கப்பட்டிருந்தார். அஸ்ஸாம் மாணவர் சங்க அலுவலகத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று சுபோத் பிஸ்வாஸ் என்பவரை மேற்கு வங்கத்தில் வைத்து மார்ச் 22ஆம் தேதியன்று கைது செய்து தலைநகர் குவகாத்திக்குக் கொண்டுவந்தது அஸ்ஸாம் காவல்துறை.

ராஜமார்த்தாண்டன் இடைநீக்கம்

ராஜமார்த்தாண்டன் இடைநீக்கம்

இந்தத் தாக்குதலின் மூளை என கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கும் அனுப்பப்பட்ட சுபோத் பிஸ்வாஸ், ஏப்ரல் 4 அன்றே தான் பிணையில் வெளியில் வர விண்ணப்பித்தார். அப்படி விண்ணப்பித்து வெளியில் வரத்தோதாக, இந்த வழக்கில் காவல்துறை திரட்டியிருந்த தகவல்களை பிஸ்வாஸ் மற்றும் அவரது வழக்குரைஞர் அம்பிகா ராய்க்கு தந்து உதவியதாகத்தான் ராஜமார்த்தாண்டன் அந்த ஏப்ரல் 4ந் தேதியன்று இடைநீக்கம் செய்யப்பட்டு, ஏப்ரல் 7ஆம் தேதியன்று கைதும் செய்யப்பட்டார்.

மேலதிகாரிகளின் சதி

மேலதிகாரிகளின் சதி

ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்டு, தனது மேலதிகாரியும் சொன்னதன் பேரிலேயே அந்தத் தகவல்கள் கொடுக்கப்பட்டன என்கிறார் ராஜமார்த்தாண்டன். ராஜமார்த்தாண்டன் இடைநீக்கம் மற்றும் கைது விவகாரத்தை அஸ்ஸாமியப் பத்திரிகைகள் ஒரு நேர்மையான காவல் அதிகாரி அவரது மேலதிகாரிகளின் சதி மற்றும் சூழ்ச்சிக்குப் பலியாக்கப்பட்டுள்ளார் என எழுதின. அதோடு, பிரபல லூயிஸ் பெர்கர் லஞ்ச-ஊழல் வழக்கையும் விசாரித்து வந்தவரான ராஜமார்த்தாண்டனை, அதிலிருந்து வெளியேற்றவே, இப்படி பொய்க்குற்றச்சாட்டில் கைது செய்திருக்கின்றனர் என்பதும் அஸ்ஸாமில் நிலவும் பொதுக்கருத்தாக உள்ளது.

விசாரணை அதிகாரி

விசாரணை அதிகாரி

லூயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல் என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த ஒரு கட்டுமான மேலாண்மை நிறுவனம். அது லஞ்சம் கொடுத்து இந்தியாவிலும் சில மாநிலங்களில் திட்டப்பணிகளைப் பெற்றுள்ளது. அப்படி 2008 - 2009ல் அஸ்ஸாம் அரசிடமும் ஒரு திட்டப்பணியைப் பெற்றது. அதைப் பெற 6.1 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் போடப்பட்டதுதான் லூயிஸ் பெர்கர் லஞ்ச-ஊழல் வழக்கு. இந்த வழக்கிலும் விசாரணை அதிகாரி ராஜமார்த்தாண்டன்தான்.

காங்கிரஸ் ஆட்சியில்..

காங்கிரஸ் ஆட்சியில்..

இந்த லூயிஸ் பெர்கர் லஞ்ச-ஊழல் வழக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட வளர்ச்சிப் பணிகள் துறை அமைச்சராக இருந்தவர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா என்பவர். இவர் கட்சி மாறி அஸ்ஸாமின் இப்போதைய பாஜக அரசிலும் அதே துறையின் அமைச்சராக இருக்கிறார். அதோடு பாஜக தலைமையிலான வட கிழக்கு ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் உள்ளார்.

பொய்க்குற்றச்சாட்டில் கைது

பொய்க்குற்றச்சாட்டில் கைது

இந்த நிலையில்தான் லூயிஸ் பெர்கர் லஞ்ச-ஊழல் வழக்கை ராஜமார்த்தாண்டன் விசாரிக்கக்கூடாது என்பதற்காக பிஸ்வாஸ் விவகார பொய்க்குற்றச்சாட்டில் அவர் இடைநீக்கமும் கைதும் செய்யப்பட்டார் என்று தெரிகிறது. விசாரணை என்ற பெயரில் ராஜமார்த்தாண்டனை இழுத்தடித்து காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதுதான் இதன் உள்நோக்கம் என்றும் தெரிகிறது.

தமிழக அரசு தலையிட..

தமிழக அரசு தலையிட..

தமிழரான ராஜமார்த்தாண்டன் இப்படி அநியாயமாகப் பழிவாங்கப்பட்டிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு இதில் தலையிட்டு ராஜமார்த்தாண்டனுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TVK leader Velmurugan condemns the arrest of Tamil IPS officer. Vel murugan urges Tamil Nadu govt to involve in this issue.
Please Wait while comments are loading...