சென்னையில் பயங்கரம்.. மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயர்.. தம்பதி பலி.. பொதுமக்கள் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து அதில் மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது இரு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இ்ந்த மின்சார வயர் அடிக்கடி அறுந்து விழுந்து வந்துள்ளது. ஆனால் அதை நிரந்தரமாக சரி செய்யாமல் அவ்வப்போது வந்து ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர் பொறுப்பற்ற மின்வாரியத்தினர். சமீபத்தில் கூட ஒரு நாய் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இந்த நிலையில் இரு உயிர்கள் அநியாயமாக பறிபோயுள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரண்டு பேரின் மரணத்திற்கு மின்வாரியத்தினரின் பொறுப்பின்மையே காரணம் என்றும் அவர்கள் குமுறுகின்றனர்.

Velacherdy couple electrocuted, people agitated

சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (29). கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுதா (26). இவர்களுக்கு ஆர்த்திஸ்ரீ (4), திவ்யாஸ்ரீ (2) என 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் கருணாநிதி தனது மனைவி, 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். வழியில், வீட்டின் அருகே உள்ள மாவு கடையில், தோசை மாவு வாங்குவதற்கு நின்றிருந்தார். அப்போது அங்கிருந்த உயர் அழுத்த மின்சார வயர் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதைக் கண்டதும் பதறிய கணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அருகில் உள்ள மணல் பகுதியில் அவர்களை தள்ளிவிட்டனர்.

அப்போது அறுந்து விழுந்த உயர்அழுத்த மின்சார வயர் கருணாநிதி, சுதா ஆகியோர் மீது விழுந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதைக் கண்ட 2 குழந்தைகளும் கதறி அழுதனர். சுதாவின் மார்பு மீது வயர் விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் அவரது மார்புப் பகுதியே கருகிப் போய் விட்டது.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டனர். பின்னர், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சார இணைப்பை துண்டித்தனர். காயங்களுடன் இருந்த 2 குழந்தைகளையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து 100 அடி சாலையில் போராட்டத்தில் குதித்தனர். பெண்கள் பெரும் குமுறலுடன் பேருந்துகளை ஆவேசமாக மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர்கள் முருகேசன், குமார், அழகு, நந்தகுமார், தன்ராஜ் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. வேளச்சேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்கும் விரைந்து வந்தார். அவரையும் முற்றுகையிட்டு மக்கள் ஆவேசத்து்டன் பேசினர்.

இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+