பேர்வெல் கொண்டாடிய மாணவர்களுக்கு பிரம்படி... 40 பேர் காயம்... பெற்றோர் ஆர்ப்பாட்டம்
வேலூர்: வேலூர் அருகே பொதுத்தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் கேக் வெட்டி பேர்வெல் கொண்டாடிய மாணவ, மாணவியர்களை ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததில் 40 பேர் காயம் அடைந்தனர். மாணவர்களை அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புதூரில் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பொதுத்தேர்வுகள் முடிந்த மாணவ, மாணவியர் நேற்று பள்ளிச் சீருடை அணியாமல் கலர் ஆடையில் பள்ளிக்கு வந்துள்ளனர். அதோடு, தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியைக் கேக் வெட்டி அவர்கள் கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்து வகுப்பறைக்கு வந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியை சசிகலா, மாணவர்களை பிரம்பால் அடித்துள்ளார். இதில் 40 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications