தொடரும் விவசாயிகள் மரணம்.. இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்க வேல்முருகன் கோரிக்கை
விவசாயத்திற்கு தண்ணீரின்றி மரணம் அடைந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் தர வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார். இதனை வலியுறுத்தி வரும் 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சென்னை: காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும், பயிர்கள் கருகி விவசாயம் பொய்த்துப் போனது. இதனால் அதிர்ச்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், மாரடைப்பு ஏற்பட்டு மரணிப்பதும் என இதுவரை 80 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வரும் 10 தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரலாறு காணாத பெரும்சோகத்தில் விவசாயிகள் மூழ்கிப் போயுள்ளனர். வறட்சியாலும் கர்நாடகா மற்றும் மத்திய அரசுகளின் வஞ்சகத்தாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துபோய்விட்டது.
காவிரி டெல்டாவில் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் தாண்டவமாடும் வறட்சியின் கோரப்பிடியை தாங்க முடியாமல் வேளாண் பொய்த்து போனதே என்ற விரக்தியிலும் இதுவரை 65 விவசாயிகள் மாண்டுபோன பெருந்துயரம் நிகழ்ந்துள்ளது.
அதுவும் கடந்த சில நாட்களாக கொத்து கொத்தாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் மாண்டு போகிற சம்பவங்கள் பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது. ஆனாலும் தமிழக அரசு இது தொடர்பாக எந்த ஒரு கருத்தையுமே தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மாண்புமிகு முதல்வர் நேரடியாக சென்று விவசாயிகளையும் விவசாய சங்க பிரதிநிதிகளையும் சந்திக்க வேண்டும்; விவசாயிகள், அவர்களது பிள்ளைகளின் கல்விக் கடன் உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்வதாக அறிவித்து அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.
ஆனாலும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. காவிரி நீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என கர்நாடகாவுக்கு மத்திய அரசும் நெருக்கடி தரவில்லை என்பது வேதனைக்கும் கண்டனத்துக்குரியதாகும்.
ஆகையால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும்; மாண்டுபோன விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ25 லட்சம் தர வேண்டும்; விவசாயிகள் குடும்பங்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் வரும் 10-ந் தேதியன்று மாபெரும் கண்டன மற்றும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விவசாய பெருங்குடிமக்களின் துயரைத் துடைப்போம்! என அன்புடன் அழைக்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications