ஜாதி முத்திரையில்லாத அரசியல்.... வேல்முருகனின் த.வா.கா. தாக்கத்தை ஏற்படுத்துமா?
சென்னை: பாமகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி கண்டவர்களில் 4 ஆண்டுகள் நிலைத்து நிற்கிற வேல்முருகன் ஜாதி கடந்த அரசியலை கையிலெடுத்து பயணிக்கிறார்... அதிமுக கூட்டணியில் இடம்பெற்று முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கணிசமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்பு உள்ளது.
பாமகவைப் பொறுத்தவரையில் அது பல்வேறு பொதுபிரச்சனைகளைக் கையிலெடுத்தாலும் ஜாதிய கட்சியாகவே தொடர்ந்தும் பார்க்கப்படுகிறது.

பாமகவின் துணைப் பொதுச்செயலராக இருந்த பண்ருட்டி தி.வேல்முருகன் கடந்த 2011-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரது அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டு கடலூர் வந்த வேல்முருகனை பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து வரவேற்றது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நிச்சயம் வேல்முருகனே தமக்கு இப்படி ஒரு மகத்தான ஆதரவு சக்தி இருக்கும் என நினைத்திருக்கமாட்டார்.
இதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற புதிய கட்சியை சில மாதங்களிலேயே அவரை தொடங்கவும் வைத்தது.
பாமக செல்வாக்காக இருந்த பகுதிகளில் செங்குத்து பிளவை த.வா.கா. ஏற்படுத்தியது. இதன் பின்னர் கடலூரிலும் சேலத்திலும் வேல்முருகன் நடத்திய மாநாடுகளில் பல லட்சம் பேர் திரண்டு அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தினர்... என்னதான் இருந்தாலும் பாமகவில் இருந்து வந்தவர்.. ஜாதி அரசியலையே கையிலெடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியின் பெயருக்கேற்ப தமிழகத்தின் வாழ்வுரிமைக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.
ஏழு தமிழர் பிரச்சனை, காவிரி விவகாரம், பாலாறு பிரச்சனை, கெயில், ஈழத் தமிழர் பிரச்சனை என தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த கையோடு, திராவிட இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், இடதுசாரிகள், இஸ்லாமிய, கிறித்துவ சிறுபான்மை இயக்கங்கள், கட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு மையப் புள்ளியாகவும் வேல்முருகன் உருவெடுத்தார்.
ஆந்திராவில் 20 தமிழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட பேரணியை வேல்முருகனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி நடத்தியது. இன்றைய மக்கள் நலக் கூட்டணிக்கான முதல் விதையே இந்த போராட்டம்தான். இருப்பினும் அரசியல் ரீதியாக வேல்முருகன் அதிமுக அணியிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறார்.
ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் நெல்லையில் பெப்சி- கோக் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் வேல்முருகன் கட்சியினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணி வைத்திருக்கிறேன் என்பது வேல்முருகனின் நிலைப்பாடு.
தற்போதைய தேர்தலில் வேல்முருகனின் த.வா.காவுக்கு அதிமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது. அதிமுக எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் த.வா.கா.வின் செல்வாக்கு என்பது கட்சிகளை பதம் பார்க்குமா? தேர்தல் சதுரங்கத்தில் அந்த கட்சி ஒரு சக்தியாக நிலைபெறுமா? என்பது போக போக தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications