அடப்போங்கப்பா… குஷ்பு எப்ப வருவாங்க?
சென்னை: தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிகர்கள், நடிகையர்கள் வருகிறார்கள் என்றாலே அந்த ஊரில் திருவிழாக் கோலம்தான். மைக் செட்டில் நிமிடத்திற்கு நிமிடம் அறிவிப்பு களை கட்டும்...
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க நடிகர், நடிகை வருகிறார் என்றால் அவரை காண பெரும் கூட்டம் கூடும்.
உங்கள் அபிமான நடிகர் வாக்கு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்... வருகிறார்... இதோ வந்துவிட்டார் என்று அறிவிப்பதை கேட்டு அடுப்படியில் குழம்பு கொதித்தாலும் கவலையில்லை என்று போட்டுவிட்டு ஓடிய காலமெல்லாம் இருக்கிறது.
பிறந்த குழந்தைக்கு ஏற்கனவே பேர் வைத்திருந்தாலும் நடிகர், நடிகையர் கையில் கொடுத்து பெயர் கூட வைப்பார்கள். இப்போதும் நடிகர், நடிகையர்கள் வாக்கு சேகரிக்க பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் கூட்டம் கூடுகிறதோ இல்லையோ அரசியலில் இணைந்துள்ள நடிகர், நடிகையர்கள் தேர்தல் பிரச்சார களத்தில் ஒப்பிக்கும் வசனத்தை கொஞ்சம் படியுங்களேன்.

வெண்ணிற ஆடை நிர்மலா
பழங்கால நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா இப்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அதிமுகவில் இணைந்த அவர், பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஆம்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

பாத்திமா பாபு
மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து திரைப்பட நடிகையும்,செய்தி வாசிப்பாளருமான பாத்திமாபாபு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தொட்ட இடம்மெல்லாம் துலங்கும் முதல்வர் அம்மா தமிழகத்தில் நல்லாட்சியை நடத்தி வருகிறார்.

முட்டாள் தினத்தில் பிரச்சாரம்
கருணாநிதி ஊழல் செய்தவர்களை திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளார். பஞ்சபூதங்களில் ஊழல் செய்த டி.ஆர்.பாலு, ராஜா, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன் ஆகியோரை வேட்பாளர்களாக திமுக நிறுத்தியுள்ளது. முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ம் தேதி பிரச்சாரத்தை கருணாநிதி அறிவித்துள்ளார் என்றார் பாத்திமா பாபு.

விஜயகாந்தை தாக்கிய ஆனந்தராஜ்
விஜயகாந்த் ஹீரோவாக நடித்த படங்களில் வில்லனாக நடித்த ஆனந்தராஜ், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கும்மிடிப்பூண்டி மற்றும் மாதர்பாக்கத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த், ஓட்டு கேட்டு வரும்போது கட்சிக்காரர்களையும் மக்களையும் சேர்த்து திட்டுவதாக கூறினார்.

நிர்மலா பெரியசாமி
திருவள்ளூர்(தனி) லோக்சபா தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபாலை ஆதரித்து அ.தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி திருவள்ளூர் பஜார் வீதியில் பிரசாரம் செய்தார். அம்மாவின் நல்லாட்சி, சாதனைகளுக்கு அதிமுகவிற்கு வாக்களியுங்கள், 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்து அம்மாவை பிரதமராக்குங்கள் என்றார்.

ராமராஜன், தியாகு
இதேபோல அதிமுகவிற்கு ஆதரவாக நடிகர்கள் தியாகு, வையாபுரி, ராமராஜன், செந்தில், ஆகியோரும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். போகுமிடமெங்கும் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று பேசுவதோடு மட்டுமல்லாது, திமுக தலைவர்களை திட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கரூரில் எம்.ஜி.ஆர், விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆதரவாக நடிகர், நடிகையர்கள் பட்டாளம் யாரும் இல்லை என்பதால், எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல வேடமிட்டு நடனமாடுபவர்களை கொண்டு கரூரில் மேடையில் ஆடவிட்டு வாக்கு சேகரித்தனர்.

ஒண்ணும் விசேசமில்லையே
அதிமுகவில் 20க்கும் மேற்பட்ட நட்சத்திர பேச்சாளர்களைக் களம் இறக்கியும் பேச்சுக்கள் எதுவும் வாக்காளர்களை கவரும் வகையில் இல்லை என்பதே உண்மை.

குஷ்பு எப்போ வருவாங்க
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வடிவேலு, குஷ்பு ஆகியோரை திமுக களம் இறக்கியது. அவர்கள் இருவரும் போன இடமெல்லாம் கூட்டம் அள்ளியது. ஆனால், ஓட்டு தான் கிடைக்கவில்லை. இம்முறை வடிவேலு ஒதுங்கிக் கொண்டார். குஷ்பு பிரச்சாரத்திற்கு வருவாரா? மாட்டாரா? எப்போது வருவார் என்பதை திருவாளர் தமிழக வாக்களர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். குஷ்பு பிரச்சாரத்திற்கு வருவாரா?












Click it and Unblock the Notifications