சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? கேட்கிறார் விஜயகாந்த்
திருப்பூர்: தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்காமல் திமுக தனித்துப் போட்டியிட தயாரா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார்.
பல்லடத்தில், திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில் மக்களுக்காக மக்கள் பணி திட்டத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், 2016 சட்டசபை தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளதால், ஜனவரி மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

வழக்குகளை சந்திப்பேன்
மக்களை வறுமையில் வைத்திருப்பதே திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று குற்றம் சாட்டிய விஜயகாந்த், லஞ்ச ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. என் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நான் அவற்றைச் சந்திப்பேன் என்றார்.

தனித்து போட்டியிடுமா
அதிமுகவிற்கு திமுக தான் மாற்று என்று ஸ்டாலின் கூறிவருகிறார். 2016 சட்டசபை தேர்தலில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட திமுக தயாரா? தனித்துப் போட்டியிட்டால் தானே கட்சிகளின் உண்மையான பலம் தெரியும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தேமுதிக ஏற்படுத்தும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜால்ரா போலீஸ்
தமிழக போலீசார் மீது பல்வேறு தரப்பிலும் அவநம்பிக்கை வந்துள்ளது. காவல்துறையினர் களங்கம் இல்லாமல், கண்ணியத்துடன் நடக்க வேண்டும். அமைச்சர்கள் ஜால்ரா அடிப்பவர்களாக உள்ளனர் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.

பனியன் தொழில் நலிவு
விழாவில் பேசிய மகளிரணித்தலைவி பிரேமலதா, திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை; பனியன் தொழிலை ஊக்குவிக்காமல் உள்ளது. பனியன் கம்பெனிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சேகரமாகும் நீரில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தே.மு.தி.க.,விடம் உள்ளது என்றார்.

தாக்கி பேச மாட்டேன்
தி.மு.க., --அ.தி.மு.க., கட்சிகளை தாக்கி, ஓட்டு சேகரிக்கும் எண்ணம் இல்லை. திருப்பூரில் அதிக நேரம் ரயில்கள் நிற்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குவோம் என்றும் பிரேமலதா கூறினார்.












Click it and Unblock the Notifications