ஜெ. இரட்டை விரல் காட்டினா என்ன அர்த்தம் தெரியுமா?: விஜயகாந்த், பிரேமலதா விளக்கம்
கோவை: எம்.ஜி.ஆர் இரட்டை விரலை காட்டினால் வெற்றி என்று அர்த்தம், ஜெயலலிதா இரண்டு விரல்களைக் காட்டுவது ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் இரண்டு பேர் உயிரிழப்பார்கள் என்ற அர்த்தத்தில் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் விளக்கம் அளித்துள்ளனர்.
மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் பரபரபப்படைந்துள்ளது. ஆளும்கட்சி, எதிர்கட்சி என அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று கோவை வடவள்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
கோவை நகரத்திலிருந்து வடவள்ளிக்கு வந்தது, சென்னையில் என் வீட்டிலிருந்து தி.நகர் அலுவலகம் சென்றது போல இருந்தது. அவ்வளவு போக்குவரத்து நெரிசல் இங்கு உள்ளது. அதேபோல கோவையில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்கிறார்கள்.

என்ன செய்தார் ஜெயலலிதா?
இந்த 5 வருடமாக ஜெயலலிதா என்னதான் செய்தார் என்று தெரியவில்லை. அப்படிப் பார்க்கும் போது, இது ஒரு நகரமா எனக் கேட்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களுக்காக நான் என்கிறார்களே அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? இந்த கோவையை, இந்தியாவின் மான்செஸ்டர் என்றார்கள். ஆனால் இன்று அதே கோவை மானங்கெட்ட மான்செஸ்டராகியுள்ளது.

மின் தட்டுப்பாடு
தமிழகமே மின் மிகை மாநிலமாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் என்ன செய்தார்கள் என்பதை வெள்ளையறிக்கை வெளியிட முடியுமா? மின்மிகை மாநிலம் என்றார்கள். ஆனால், இங்கு இரவும் கூட மின் தட்டுப்பாடாகத்தான் இருக்கிறது.

அறிக்கை தேவை
தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்கள் கொடுத்துள்ளார்கள் என்பதை அவர்களால் வெள்ளையறிக்கையாக வெளியிட முடியுமா? வெள்ளையறிக்கை வேண்டாம், வெறும் அறிக்கை அவர்களால் கொடுக்க முடியுமா?

உயிர்பலிகள்
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் இரட்டை விரல் காட்டியது வெற்றிச் சின்னமாக இருந்தது. ஆனால், இன்று ஜெயலலிதா இரண்டு விரல்களைக் காட்டுவது ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் இரண்டு பேர் இறப்பார்கள் என்ற அர்த்தத்தில் உள்ளது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவருக்கு கவலையில்லை.

திமுக அதிமுக சண்டை
இதேபோலத்தான் நல்லாட்சி அமைக்க ஆதரவு கேட்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. ஐந்து முறை செய்யாதவர், இப்போது மட்டும் என்ன செய்து கொடுத்துவிடப் போகிறார்? வேட்பாளர்களை மாற்றுவதிலும், கொள்ளையடித்தது யார் என்பதிலும் இரு கட்சியினரிடையேயும் சண்டை நீடிக்கிறது.

எதுவும் செய்யவில்லை
25 ஆண்டுகளாக இருவரும் மாறி, மாறி ஆட்சி அமைத்தும், மக்களுக்கும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. பின்னர் ஏன் இந்த அக்கப்போர் செய்கிறார்கள் எனப் புரியவில்லை? இந்த சண்டை தொலைக்காட்சியிலும் தொடருகிறது.

அரசியல் போர்
இரு கட்சியினரிடையேயும் முரட்டு பணம் வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், எங்களிடம் முரட்டு மக்களின் மனம் இருக்கிறது.எனக்கு உடல் இருக்கிறது தாங்குகிறேன். மற்றபடி எல்லாமே மக்களின் மனம் தான். இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கும் போர். தி.மு.க, அ.தி.மு.க எனும் அதர்மங்கள் தோல்வியடையும்.

எங்களுக்கு ஏறுமுகம்
தர்மத்தின் அடையாளம் நாங்கள் ஆறு பேர். 20 வருடத்துக்கு முன்பு, மருதமலைக்கு வந்தேன். ஆறுமுகம் குடியிருக்கும் ஊர் இது. ஆறுமுகத்துக்கு என்றுமே ஏறுமுகம் தான்; இறங்குமுகம் இல்லை. அடுத்து நான் பல இடங்களுக்கு பிரச்சாரத்துக்காக செல்ல வேண்டும் என்று கூறி முடித்தார் விஜயகாந்த்.

பிரேமலதா விளக்கம்
திருச்சி சட்டசபைத் தொகுதியில் பிரச்சாரம் செய்த பிரேமலதா, எம்.ஜி.ஆர் இரண்டு விரலை காண்பித்தால் இரட்டை இலை என அர்த்தம், ஜெயலலிதா இரண்டு விரல் காட்டினால் இரண்டு பேர் இன்று பலி என அர்த்தம். வெளுத்து வாங்கும் வெயிலில் பிரசாரம் என்கிற பெயரில் மக்களை சாகடிக்கிறார் ஜெயலலிதா என்று குற்றம் சாட்டினார்.

மாற்றம் வேண்டும்
தமிழகத்தில் இன்று என்ன இருக்கு என்று கேட்டால், டாஸ்மாக்தான் தெருவுக்குத் தெரு இருக்கிறது என்றுதான் பதில் வருகிறது. நாளைய தமிழகத்தை ஆளக்கூடிய தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் எஜமானர்கள் நீங்கள்தான். அதற்கேற்ற வகையில், மாற்றத்தைக் கொண்டு வர சிந்தியுங்கள்.












Click it and Unblock the Notifications