அதிமுகவினரைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல "நச்"சுன்னு கேள்வி கேட்ட விஜயகாந்த்!
சென்னை: சென்னையை சுத்தம் செய்யும் பணியில் அத்தனை தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் இந்த அதிமுகவினர் மட்டும் எங்குமே துப்புரவுப் பணியில் ஈடுபடவில்லையே. அது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
அதிமுக கட்சித் தலைமை அதிமுகவினரை துப்புரவு பணியில் ஈடுபட சொல்லாதது ஏன்? என்றும் விஜயகாந்த் வினவியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

சென்னை துப்புரவுப் பணி
சென்னையை சுத்தம் செய்ய ஆயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களின் பணிச் சுமைக்காக கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டதாக அதிமுக அரசு கூறிவருகிறது. ஆனால் சென்னை வந்துள்ள ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சரியான உணவும், இருப்பிட வசதியும் செய்துதரவில்லையென குற்றம் சாட்டுகின்றனர்.

மலைக்கும் மடுவுக்கும்
அரசு தரப்பில் சொல்லப்படும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், தற்போது சென்னையில் உண்மையாகவே துப்புரவு பணி செய்பவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ளதுபோல் உள்ளது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமனத்திலும், பணியாற்றுவதிலும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் துப்புரவு பணியாளர்களே குற்றம் சாட்டுகின்றனர்.

எங்களது கட்சியினர் ஈடுபட்டனர்
நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்துதரப்பு மக்களும் ஒன்றுசேர்ந்து தேமுதிக சார்பில் ஞாயிறு அன்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அதை பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த பல தரப்பினரும், அரசை எதிர்பார்த்து ஏமாந்தது போதுமெனக் கருதி, தாங்களாகவே முன்வந்து தங்களது பகுதிகளில் தன்னார்வத்தோடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதை தற்போது பார்க்கமுடிகிறது. இவர்களெல்லாம் என்ன துப்புரவு பணியாளர்களா? இல்லையே, தங்களாலான உதவியை செய்யவேண்டும் என்கின்ற நல்ல மனமும், சிந்தனையும் தானே துப்புரவு பணியை செய்ய வைத்தது.

அக்கறையே இல்லாத ஜெயலலிதா
நான், எனது, என்னுடையதென உரிமை கொண்டாடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அந்த சிந்தனையும், அக்கறையும் இல்லையா? உங்களுக்காக நான், உங்களோடு நான் இருக்கிறேன், உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் என்று தமிழக மக்களிடம் வாய்ஜாலம் காட்டி ஏமாற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதிமுகவினரை துப்புரவு பணியில் ஈடுபட செய்திருக்கலாம் அல்லவா? ஏன் சொல்லவில்லை? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்களின் மனக்குமுறல்
இந்த பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களோடு இருப்பேன் என்று மக்கள் முதல்வரால் காட்ட முடியவில்லை என்றும், வீதிக்கு வாருங்கள் முதல்வரே என்றும், சென்னை தமிழகத்தின் தலைநகரா? குப்பைகளின் தலைநகரா? என்றெல்லாம் மக்களின் மனக்குமுறலை எடுத்துக்காட்டியுள்ளது ஒரு பத்திரிகை.

போஸ் கொடுக்கும் அமைச்சர்கள்
அரசின் இலவச பொருட்களை அரசு அதிகாரிகள் வழங்கும் போது அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மேயர்கள், மாவட்டம்/ ஒன்றியம்/ நகராட்சி/ பேரூராட்சி/ ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் போன்ற அனைவரும் முன்வரிசையில் நின்று, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு, தங்களைப்போல் போஸ் கொடுப்பதில் காட்டும் அக்கறையை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுபணி செய்வதில் காட்டியிருக்கலாம் அல்லவா?

துப்புரவுப் பணிக்கு யாருமே இல்லையா?
அதிமுகவில் துப்புரவு பணி செய்வதற்கு யாரும் தயாராக இல்லையா? அடுத்தவர்கள் கொண்டுவரும் நிவாரண பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை ஓட்டுவதில் அக்கறை காட்டுபவர்கள், அதே அக்கறையை துப்புரவு பணியில் காட்டியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

இவரா மக்கள் தலைவர்?
மக்களை நேசிக்கின்ற தலைவர் யார்? மக்களுக்காக உழைக்கின்ற தலைவர் யார்? சொகுசான, சுகபோக வாழ்க்கை வாழ்பவர் யார்? என்பதை தமிழக மக்கள் நன்கு தெரிந்துகொண்டார்கள். இனியும் அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. தமிழக முதல்வராக இருக்கின்ற ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட மக்களுக்காக துப்புரவு பணியாற்றுவோம் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? என்பதை தமிழக மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் இதற்கெல்லாம் பதிலளிக்க தாயாராக உள்ளார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் எனக் கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications