விஜயகாந்த் தனித்து போட்டியிட்டால் யாருக்கு நஷ்டம்.... ஜூவி சர்வே
சென்னை: எங்க கூட்டணியிலதான் இருக்காரு என்று பாஜக சொல்ல... எங்க கூடத்தான் வருவார் என்று மக்கள் நலக்கூட்டணி நினைக்க... பழம் நழுவி பாலில் விழும் என்று திமுக கனவு காண... ரைட் இண்டிகேட்டர் போட்டு லெட்ப்ல திரும்புவது போல பாவ்லா காட்டி, நேராக போய், திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தனித்து போட்டி என்று ஆரம்பித்த இடத்திற்கே யு டர்ன் அடித்து விட்டார் தேமுதிக விஜயகாந்த்.
சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தாலும் அறிவித்தார், அப்போ கட்ன பணம் கடல்ல கரைச்ச பெருங்காயமா? என்று கட்சிக்காரர்கள் கலங்கத் தொடங்கியுள்ளனர். பழம் நழுவி இப்படி கீழே விழுந்திருச்சே என்று தெரிந்து கொண்ட திமுக அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்து விட்டது.
தேர்தலுக்கு இன்னும் நாள் இருப்பதால் விஜயகாந்த் தன் முடிவை தன் மறுபரிசீலனை செய்வார் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் பாஜக, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், மீண்டும் பலவிதமாக அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனாலும் விஜயகாந்த் தன் கூட்டணிக்கு வருபவர்கள் வரலாம் என்று கூறி விட்டு வேட்பாளர்களை தேர்வு செய்யத் தொடங்கிவிட்டார்.

ஜூவி சர்வே
அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக என இம்முறை 6 முனை போட்டி ஏற்படுகிறது. 2006, 2009 தேர்தல்களில் தேமுதிக தனித்து போட்டியிட்டதில் அதிமுக பாதிக்கப்பட்டது அதிமுக கூட்டணிதான். இம்முறை விஜயகாந்த் எடுத்துள்ள தனித்து போட்டி என்ற முடிவு யாருக்க பாதிப்பை ஏற்படுத்தும்? எதிர்கட்சித்தலைவராக விஜயகாந்த் செயல்பாடு எப்படி இருந்தது என்பன உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து ஜூனியர் விகடன் இதழ் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

மக்களிடம் வரவேற்பு
தனித்து போட்டியிடப் போவதாக விஜயகாந்த் எடுத்துள்ள முடிவினை 36.37% மக்கள் வரவேற்றுள்ளனர். நேரடியாக கேட்கப்பட்டதில் 3,129 பேரும், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 7,422 பேரும் வரவேற்றுள்ளனர்.
அதே நேரத்தில் தவறான முடிவு என்று 23.26% பேரும், காலம் கடந்த முடிவு என்று 16.55% பேரும், கூட்டணி அமைப்பதுதான் பெஸ்ட் என்று 23.82% பேரும் கருத்து கூறியுள்ளனர்.

விஜயகாந்த் செல்வாக்கு
தனித்து போட்டியிடப்போவதாக விஜயகாந்த் அறிவித்த உடன் அவரது செல்வாக்கு கூடியுள்ளது என்று 30.87% பேரும், குறைந்துள்ளது என்று 33.90% பேரும், அப்படியேதான் உள்ளது 35.23% பேரும் கருத்து கூறியுள்ளனர்.

எதிர்கட்சித்தலைவர் செயல்பாடு
எதிர்கட்சித்தலைவராக விஜயகாந்தின் செயல்பாடு மோசம் என்று அதாவது பெயில் மார்க் போட்டுள்ளனர் 28.76% பேர். ஜஸ்ட் பாஸ் என்று 26.34% பேரும் மதிப்பெண் போட்டுள்ளனர். 20.17% பேர் விஜயகாந்தின் செயல்பாட்டுக்கு 50 மார்க் போட்டுள்ளனர், 13.74% பேர் 75 மார்க்கு மேல் போட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 11% பேர் மட்டுமே விஜயகாந்துக்கு 100க்கு 100 மார்க் போட்டுள்ளனர்.

யாருக்கு பாதிப்பு
விஜயகாந்த் தனித்து போட்டியிடப்போவதாக எடுத்த முடிவினால் திமுகவிற்கே பாதிப்பு அதிகம் என்று 41.95% பேர் கருத்து கூறியுள்ளனர். அதேநேரத்தில் அதிமுகவிற்கு பாதிப்பு அதிகம் என்று 21.57% பேரும், தேமுதிகவிற்கு பாதிப்பு அதிகம் என்று 21.72 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். மக்கள் நலக்கூட்டணிக்க பாதிப்பு என்று 9.54% பேரும், பாமகவிற்கு பாதிப்பு என்ற 5.22% பேரும் கருத்து கூறியுள்ளனர்.

முதல்வர் விஜயகாந்த்
விஜயகாந்த் முதல்வராகவேண்டும் என்று 29.90% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 41.02 பேர் விஜயகாந்த் முதல்வராவதை விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்பேன் என்று 29.08% பேர் கருத்து கூறியுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் முடிவு
விஜயகாந்த்துக்கு ஒட்டுப்போடுவேன் என்று 25.86%பேரும், போடமாட்டேன் என்று 34.90% பேரும், தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்பேன் என்று 29.24% பேரும் கருத்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications