ஓ.பி.எஸ் –ன் யு.பி.எஸ் ஆட்சி, மிஸ்ட் கால் கட்சி பா.ஜ.க.: பொதுக்குழுவில் கலந்து கட்டிய பிரேமலதா!
கோவை: பவர் வந்தா யு.பி.எஸ்க்கு வேலையில்லை, ஆனால் பவரில் இருந்தாலும் வேலை செய்யமாட்டார் ஓ.பி.எஸ் என்று தேமுதிக பொதுக்குழுவில் அதிரடியாக பேசி அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் பிரேமலதா.
கோவையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில்,விஜயகாந்த் பேசியது சற்றே வள வள ரகம் என்றாலும் அவரது மனைவி பிரேமலதா பேசியது ‘நச்' ரகமாம்.
அதிமுக, திமுக, ஏன் பாஜகவை கூட விட்டுவைக்கவில்லை பிரேமலதா. சுள்ளென்று சிக்கன் பிரியாணி சாப்பிட்டது போல இருந்தது என்கின்றனர் பிரேமலதாவின் உரையை கேட்டவர்கள்.
அப்படி என்னதான் பேசினார் மேற்கொண்டு படியுங்களேன்.

மக்களை சந்திக்காத ஜெ
இப்போ மக்கள் முதல்வர்னு ஜெயலலிதாவை சொல்றாங்க. மக்களையே சந்திக்காம வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்குற ஜெயலலிதா எப்படி மக்கள் முதல்வராக இருக்க முடியும்?.ஜெயலலிதா, மக்களை சந்திக்காமல் வீட்டில் முடங்கி கிடப்பது ஏன்? அதற்கான காரணத்தை அவரால் சொல்ல முடியாது.

காப்பாத்த முடியலையே
எங்களோட 8 எம்.எல்.ஏக்களை எங்கக்கிட்ட பறிக்கணும்னு நினைச்ச ஜெயலலிதாவோட நிலைமை இப்போ என்னாச்சு? தன் தொகுதியைக்கூட ஜெயலலிதாவால காப்பாத்திக்க முடியலை.

ஊரே சிரிக்குதே
சட்டசபையில் நம்ம கேப்டன் பேசியதை கேட்டு ஜெயலலிதா குலுங்கிக் குலுங்கி சிரிச்சார். இப்போ ஊரே ஜெயலலிதாவை பார்த்துச் சிரிக்குது. நம்மைப் பாத்து சிரிச்சவங்க எல்லாம் அதலபாதாளத்துக்குப் போயிட்டாங்க.

ஓ.பி.எஸ் யார்?
தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ்., அல்ல; அவரை, யு.பி.எஸ்., என்று தான் அழைக்க வேண்டும். அவருடைய செயல்பாடுகள் அப்படி தான் உள்ளது. தமிழ்நாட்டில் யு.பி.எஸ் ஆட்சிதான் நடக்கிறது.

டாஸ்மாக் கடைகள்
தமிழக மக்களின் ரத்தத்தை உறிஞ்சி, பெண்களை விதவைகளாக்கிக் கொண்டு இருக்கும் அரசு, மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்.

வசூல் கட்சியா?
தமிழகத்தில் உள்ள, மற்ற அரசியல் கட்சிகளை போல தே.மு.தி.க., பொதுமக்களிடம் வசூல் செய்து, கட்சி நடத்தவில்லை. கட்சி தலைவர் விஜயகாந்த், தான் சம்பாதித்த பணத்தை, தமிழக மக்களுக்காக செலவழித்து வருகிறார்.

மிஸ்டுகால் கட்சி
பா.ஜ.க 'மிஸ்டு கால்' கட்சி. அக்கட்சியினர், மொபைல்போனில் 'மிஸ்டு கால்' கொடுத்து, கட்சியை வளர்க்கப் பார்க்கின்றனர். மிஸ்டு கால் மூலம், பூத்துக்கு, 100 புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அது சரியான அணுகுமுறை இல்லை. அதனால், நம் கட்சி நிர்வாகிகள் அப்படி செய்ய வேண்டியதில்லை.

கிண்டலுக்கு பதில்
ஃபேஸ்புக், வாட்ஸ் அப்ன்னு எல்லோரும் அது பின்னாடி போயிட்டு இருக்காங்க. நீங்க எல்லோரும் அதைப் பயன்படுத்துங்க. அது மூலமா ஆளுங்களை சேருங்க. ஃபேஸ்புக், வாட்ஸ் அப்ல எல்லாம் நம்ம கேப்டனை கிண்டல் பண்ணி போடுறாங்க. அவரோட உடல்நிலை பத்தி கிண்டல் அடிக்கிறாங்க. அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க வேண்டாம்.

கஷ்டத்தின் பலன்
ஓவரா யாராவது கிண்டல் பண்ணியிருந்தாங்கன்னா சைபர் க்ரைம் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணுங்க. 'கேப்டனை 100 வருஷம் நல்லா பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அவரோட அரசியலை பாதுகாக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் நிச்சயம் வீண்போகாது'

நேரடியாக களமிறங்குவோம்
நம் கட்சியின் கொள்கைகள், திட்டங்களை, நேரடியாக மக்களை சந்தித்து, அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். பின்னர், பூத் ஒன்றுக்கு, 200 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பாஜகவினப் லோக்சபா தேர்தலின்போது என்ன வாக்குறுதி அளித்தனரோ? அதை செய்ய வேண்டும் என்பது தான் நம் எதிர்பார்ப்பு.

குடும்ப அரசியல்
இன்னொரு பக்கம் பார்த்தீங்கன்னா தி.மு.க குடும்பச் சிக்கலில் சிக்கித்தவிக்குது. எப்படிப் பார்த்தாலும் அ.தி.மு.க., தி.மு.க இரண்டுமே ஊழல் கட்சிகள்தான். ஊழலை எதிர்த்து கேள்வி கேட்குற ஒரே கட்சியா நாம இருக்கோம்.

அடுத்து நம்ம ஆட்சி
ஊழல் இல்லாத ஆட்சியை நம்ம கேப்டனால் மட்டும்தான் கொடுக்க முடியும். உங்கக்கிட்ட நான் கேட்டுக்கிறது எல்லாமே, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கணும். அப்படி சேர்த்துட்டீங்கன்னா அடுத்து நம்ம ஆட்சிதான் என்று அதிரடியாக முடித்தார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications