திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு: ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்த விருதுநகர் மாவட்ட காங். தலைவர் வேலாயுதம்
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் திடீரென ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
விருதுநகர்: திருநாவுக்கரசரின் அதிமுக ஆதரவு நிலைப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நாளை நிரூபிக்க உள்ளார். இதற்காக நாளை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிறப்புக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதேபோல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரசும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. திருநாவுக்கரசர் பெயரிலான டிவிட்டர் பக்கத்திலும் அதுகுறித்து தகவல் வந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே அதை மறுத்து விட்டார் திருநாவுக்கரசர்.
கட்சி தலைமையின் முடிவுக்கு ஏற்ப எம்எல்ஏக்கள் செயல்படுவார்கள் என்றும் நாளை தான் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறிவிட்டார். இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே திருநாவுக்கரசர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அணிக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் செயல்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் திருநாவுக்கரசரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியில் இணைந்துள்ளார்.
தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications