சென்னை: வேலை மூலம் வெளிச்சம் கொடுங்கள்... பார்வையற்றோர் மறியல்
சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கக்கோரி ஆசிரியர் கூட்டமைப்பினர் சென்னை நேப்பியர் பாலத்தில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதன்காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்த்தல் பணிகள் முடிந்து தயாராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என்பது பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையாகும்.

இதனை வலியுறுத்தி நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை இயக்கக வளாகத்தில் இந்த அமைப்பினர் 10 பேர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏற்கனவே மேற்கண்ட கோரிக்கை உட்பட மொத்தம் 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதே பள்ளிக்கல்வித்துறை இயக்கக வளாகத்தில் பார்வையற்ற பட்டதாரி பெண்கள் 7 பேர் இன்று மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பார்வையற்ற பட்டதாரிகள் ஏராளமானோர் இன்று நேப்பியர் பாலம் அருகே அனுமதியின்றி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திடீர் மறியல் காரணமாக காமராஜர் சாலை, ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications