"பாஜகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? ஒப்பிட்டு விமர்சித்த அண்ணாமலை!
தென்காசி: பெண்களுக்கு செப்.15 முதல் ஆயிரம் கொடுப்பதாக சொன்னார்கள். தேர்தல் வாக்குறுதி கொடுத்து 24 மாதங்கள் ஆகிவிட்டது. செப்டம்பர் மாதத்துடன் 28 மாதம் ஆகிவிடுகிறது. எனவே 28 மாதத்திற்கு கணக்கிட்டு 28 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
தென்காசியில் வெள்ளிக்கிழமை இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அண்ணாமலை கூறியதாவது:-
திமுகவை யாராவது எதிர்த்தால் அவதூறை பரப்பி விடுவதுதான் இன்று திமுகவின் ஸ்டைல். ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்றால் இது இல்லை என்று நீங்கள் புரூப் பண்ணுங்க என்று சொல்கிறார்கள்.

புரூப் பண்ண சொன்னால் எப்படி?
உங்களிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் உள்ளது. 80 ஆயிரம் போலீஸ் உள்ளது. உளவுத்துறை உள்ளது. எல்லாத்துறையும் உங்களிடம் வைத்துக்கொண்டு என்னை புரூப் பண்ண சொன்னால் எப்படி? அண்ணாமலை அண்டார்டிகாவில் ரிசார்ட் வச்சிருக்கார் என்று வரும்.. தென் ஆப்பிரிக்காவில் வைர சுரங்கம் வைத்திருக்கிறார் என்று வரும்.. இன்னும் கொஞ்சம் ஏமாந்தால் வானத்தில் கோட்டை கட்டி அங்கு வாழ்கிறார் என்பார்கள்.

பூ விற்க வேண்டும்
பாரதிய ஜனதா கட்சியை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும். சுத்தமான அரசியலுக்கு வித்திட வேண்டும். சுத்தமான அரசியல் என்பது மக்களுக்கு புரிய வேண்டும். திமுக பூ விற்கும் அக்காவிற்கு ஓட்டிற்கு 500 கொடுத்தால் காலம் முழுவதும் நீங்கள் பூ விற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மோடி அதே பூ விற்கும் அக்காவிற்கு 5 ஆயிரம் கொடுத்தால் நீங்கள் உரிமையாளர் ஆகுங்கள் என்று சொல்கிறார்கள்.

நீங்கள் உரிமையாளர் ஆகுங்கள்
இதுதான் இரண்டிற்கும் வித்தியாசம், திமுகவிற்கும் பாஜகவிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். திமுகவை பொறுத்தவரை இளைஞர்கள் போஸ்டர் ஒட்ட வேண்டும்... அடுத்த பட்டத்து இளவரசர் ஆட்சிக்கு வர உதவி செய்ய வேண்டும். ஆனால், மோடியை பொறுத்தவரை இளைஞக்ரள் தொழில் ஆரம்பிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்க வேண்டும்.

திருவள்ளுவர்தான் வரவேண்டும்
இந்தியாவின் அடுத்த பெரிய மனிதராக வர வேண்டும் என்று நினைக்கிறார். தமிழகத்தில் பட்ஜெட் போட்டு இருக்கிறார்கள். பட்ஜெட்டில் பிடிஆர் ஒரு மொழி பேசினார். அது என்ன மொழி என்று கண்டுபிடிக்க திருவள்ளுவர்தான் வரவேண்டும். அவர் கண்டுபிடித்த பிறகு கருணாநிதி வந்து இதுதான் தமிழ் என்று சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

28 ஆயிரம் கொடுக்க வேண்டும்
பெண்களுக்கு செப்.15 முதல் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். தேர்தல் வாக்குறுதி கொடுத்து 24 மாதங்கள் ஆகிவிட்டது. செப்டம்பர் மாதத்துடன் 28 மாதம் ஆகிவிடுகிறது. எனவே 28 மாதத்திற்கு கணக்கிட்டு 28 ஆயிரம் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னீர்கள். எனவே நிதி அமைச்சரை நாம் கேள்வி கேட்காமல் விட்டு விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications