11 மணிக்கு மேல் இதை செய்யாதீங்க! வெயிலால் இவ்வளவு பிரச்சினை வருமா?
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எல்நினோ ஆண்டின் தாக்கம் தொடர்வதால் கோடை வெயில் தாக்கமானது அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

1998இல் இருந்து 2017 வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 66 ஆயிரம் மக்கள் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இறந்து இருக்கிறார்கள் என்று அரசாங்க அறிக்கை சொல்கிறது.
ஆகவே வழக்கமான வெயில்தானே என்று யாரும் அலட்சியம் காட்டக் கூடாது. எந்தளவுக்கு வெயிலின் தாக்கத்தால் உடனிலையில் உபாதைகள் ஏற்படும் என்பதைச் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொதுச்சுகாதார மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தேரணிராஜன் விளக்கி உள்ளார்.
அவர் சில மருத்துவ ஆலோசனை வழங்கி உள்ளார். வெயிலின் தாக்கம் குறித்து டாக்டர் தேரணிராஜன், "ஒவ்வொரு வருஷமும் வெயில் காலம் என்பது நமக்குப் பழக்கமான ஒன்றுதான்.
ஆனால், இந்த ஆண்டு வழக்கமான வெயில் இல்லை. மிக அதிகமாக அதன் தாக்கம் இருப்பதை உணர்கிறோம். கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பநிலையின் அளவு கூடுதலாக இருக்கிறது.
இந்தக் கடும் வெயில் நேரத்தில் என்னவெல்லாம் செய்யக் கூடாது? எனக் கேட்டால், காலை 11 மணி முதல் 3 மணிவரை பயணங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லக் கூடாது.

மீறி வெளியில் செல்ல நேர்ந்தால், கண்களுக்குக் கண்ணாடி அணிவது அவசியம். தலைக்குத் தொப்பி போட வேண்டும். கைகளை முழுமையாக மூடுவதைப் போல் முழு சட்டை அணிய வேண்டும்.
அதில் மிகமிக கவனிக்க வேண்டியது, உடம்பை ஒட்டியதைப் போல இறுக்கமான உடைகளை அணியக் கூடாது. தளர்ந்த ஆடைகளை அணிவது நல்லது. உடையிலேயே கூட அதிக நிறம் உள்ளவற்றை அணியக் கூடாது. மிதமான நிறத்தில் ஆடைகளை அணிவது நல்லது.
வெளியில் செல்லும் போது ஒரு பாட்டிலில் மோர் கொண்டு போகலாம். இளநீர் நல்லது. குறைந்தது நீரையாவது கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்?
பொதுவாக உடலில் இறங்கும் உஷ்ணம் வெளியேற வேண்டும். சில நேரங்களில் வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிடும். அதனால் கடுமையான தலைவலி வரலாம். ஒரு கிறக்கம் வரலாம்.
தலை வியர்த்து வடிவதால் சோர்ந்து போகலாம். அல்லது தலைப் பாரம் உள்ளதைப் போல ஒரு உணர்வு வரலாம்.
இதனல் பல்ஸ் அதிகரிக்கலாம். மயக்கம் வரலாம். நெஞ்சு படப்படப்பு வரலாம். அதனால் உடற்சோர்வு ஏற்படலாம். நாம் என்ன நிலையில் உள்ளோம் என்ற உணர்வு இல்லாமல் குழப்பம் உண்டாகலாம். இவை எல்லாம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உடலின் உள்ளே இறங்கிய வெப்பமானது வெளியேறாமல் தடைப்படும் போது உடல் நமத்துப் போகலாம். வறண்டு போகலாம். நாக்கு வறட்சி வரலாம். இதனால் ஒருவர் சுயநினைவை இழக்கக் கூடும்.
உடலில் நடக்கும் வேதி மாற்றத்தால் பல உறுப்புகள் செயல்படுவதில் தடங்கல் வரலாம். இதனை systemic inflammatory response syndrome என்று சொல்வோம். தோலில் உள்ள துவாரங்கள் வழியே வெப்பம் வெளியேறப் பார்க்கும்.
அதனால் பிபி அளவு மாறுபடும். உடனடியாக பிபி கீழே இறங்கலாம். இது பல்ஸ் ரேட்டை கூட்டிவிடும். இதனால் வலிப்பு வரலாம். இதைத் தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று சொல்கிறோம்.
இப்படியான அறிகுறிகளை ஒருவர் உணர்ந்தால் உடனடியாக வெயிலில் பயணிப்பதைத் தவித்து மரநிழலில் அமர்ந்து கொள்வது நல்லது. உடனடியாக நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சட்டைகளை ஈரமாக்கிக் கொள்ள வேண்டும். ஐஸ் கட்டிகள் கிடைத்தால் அக்குள் பகுதியில் உள்ளே வைத்துக் கொள்ள வேண்டும். தொடையின் இடையில் வைக்கலாம். இப்படிச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
இதை மீறி உபாதைகள் தொடர்ந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கட்டாயம் மருத்துவர் ஆலோசனையைப் பெற வேண்டும்" என்கிறார்












Click it and Unblock the Notifications