கள்ளக்குறிச்சியில் காலையில் கைது..மாலையில் ரீல்ஸ்.. அன்புமணியிடம் ஆதங்கத்தை கொட்டிய நபர்
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் விற்பவர்கள் காலையில் கைது செய்யப்பட்டால் மாலையில் வெளியில் வந்து விடுவார். நாங்கள் அவரை பற்றி போலீசில் புகார் கொடுத்தால் எங்க வீட்டுக்கே வந்து சண்டைக்கு வருவார்கள் என பாமக தலைவர் அன்புமணியிடம் இளைஞர் ஒருவர் ஆதங்கத்தை கொட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் கள்ளக்குறிச்சியில் நடக்கும் கள்ளச்சாராய வியாபாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டினார்.

அப்போது அவர் கூறும் போது, கள்ளச்சாராயம் விற்பவர் காலையில் கைது செய்யப்பட்டால் மாலையில் வெளியில் வந்து விடுவார். நாங்கள் அவரை பற்றி போலீசில் புகார் கொடுத்தால் எங்க வீட்டுக்கே வந்து சண்டைக்கு வருவார்கள். இங்கிருந்து 10 வீடு தான் சார்.. சாராயம் விற்கும் இடம் இதில் இருந்து 10 வீடு தள்ளி இருக்கிறது.. கேஸ் கொடுத்த போது, நான் விற்பேன்.. ஏன் வாங்கி குடிக்கிறாங்க என்று கேட்கிறார். ஒன்றுமில்ல சார்.. இப்ப திரும்ப வந்தால், மீண்டும் கள்ளச்சாராயம் விற்கத்தான் போகிறார்கள் என்றார்..
அதற்கு அன்புமணி எல்லாம் தெரியுதுப்பா.. காலம் காலமாக நடக்குறதுதான். காவல்துறை, காவலர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாருமே உடந்தைதான். அரசு வருமானம் இதுவல்ல.. அரசு வருமானம் டாஸ்மான்தான். ஆனால் கள்ளக்குறிச்சியில் அதைவிட பெரிய மார்க்கெட் இங்க நடந்து கொண்டிருக்கிறது..
அப்போது ஆதங்கத்தை கொட்டிய நபர் பேசுகையில், இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் தான் கோர்ட் இருக்கிறது. போலீஸ் ஸ்டேசன் இருக்கிறது.. போலீஸ் ஸ்டேசன் பின்னாடி தான் விற்கிறார்கள். (அப்போது அன்புணி வரும் வழியில் அந்த இடத்தை பார்த்துவிட்டுத்தான் வந்தேன் என்று கூறினார்) நாங்கள் சாராயம் விற்பது குறித்து கேட்ட போது எங்களை அடித்திருக்கிறார்கள்..
இதேதெருவில் ஐந்து வக்கீல், இரண்டு போலீஸ் இருக்கிறார்கள்.. எல்லாரிடமும் சொல்லியிருக்கிறோம்.. ஆனால் நடவடிக்கை இல்லை.. இந்த தெருவில் 24 மணி நேரமும் போலீஸ் வந்து செல்லும் இடம் தான்.. நாங்கள் என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டார்கள்" என்று ஆதங்கத்தை கொட்டினார். தொடர்ந்து பலர் அன்புமணியிடம் அங்கு நடப்பது குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.












Click it and Unblock the Notifications