அரசு மருத்துவமனை டூ கனியாமூர்.. மாணவியின் உடலை கொண்டு செல்வது எப்படி.. பக்கா பிளான் போட்ட போலீஸ்
கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மாணவியின் உடலை எப்படி எடுத்துச் செல்ல போகிறார்கள் என்பது குறித்து போலீஸார் தற்போதே திட்டமிட்டுள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூராய்வு முடிவுகளையும் ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையேற்று மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நாளை காலை 6 முதல் 7 மணிக்குள்ளாக மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 6 மணிக்குள் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

10 நாட்கள்
இதையடுத்து கடந்த 10 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்ல ஏற்கெனவே மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் இருந்தனர். மாணவியை வைத்துக் கொண்டு செல்லப்படும் ப்ரீசர் பாக்ஸ் என அனைத்து தயாராகவே உள்ளது.

பாதுகாப்பு பணி
அது போல் பாதுகாப்பு பணிக்கு போலீஸாரும் தயார் நிலையில் உள்ளனர். மாணவியை நல்லடக்கம் செய்யும் போதோ சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்லும் போதோ மீண்டும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருச்சி சரக ஐஜி சந்தோஷ்குமார் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

யார் பாதுகாப்பு
இவருடன் 3 காவல் துறை கண்காணிப்பாளர்கள், 2 ஏடிஎஸ்பிக்கள் , 20 க்கும் மேற்பட்ட காவல் துறை ஆய்வாளர்கள் உள்பட 150 -க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மாணவியின் உடலை கொண்டு செல்வதற்காக தனி வாகனமும் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனையிலிருந்து அந்த மாணவியின் வீடு, இடுகாடு வரை அந்தந்த காவல் துறைக்குள்பட்ட போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் போகிறார்கள்.
Recommended Video

வாகனத்தை நிறுத்த தடை
வழியில் வாகனத்தை நிறுத்தி அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி இல்லை. மாணவியின் உடலை எடுத்துச் செல்லும் வாகனம் எந்த காரணத்தை கொண்டு வழியில் நிறுத்தக் கூடாது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் எடுத்துச் செல்லப்படும் உடல் நேராக மாணவியின் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications