நிறைய கேள்விகள்... நிறைய சந்தேகங்கள்.. ராம்குமார் "முழுமை"யாக பேசினால்தான் "உண்மை" தெரியும்!
சென்னை: சுவாதி படுகொலை தொடர்பாக தற்போது போலீஸார் தெரிவித்துள்ள தகவல்கள் முழுமையானதாக இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது. பல குழப்பங்கள், கேள்விகள், சந்தேகங்கள் இதில் தலை தூக்கியபடி உள்ளன. ஆனால் எந்த சந்தேகத்திற்குமே விடை இல்லை அல்லது விடை கிடைக்காது என்ற நிலை.
ராம்குமார் முழுமையாக பேச வேண்டும், அவரை முழுமையாக, சுதந்திரமாக வாக்குமூலம் அளிக்க விட வேண்டும். அப்போதுதான் கொலைக்கான பின்னணி குறித்த "உண்மை"யான காரணங்கள் வெளிப்படும் என்று பலரும் கருதுகின்றனர்.
தற்போதைய போலீஸ் கூற்றுப்படி ராம்குமார் ஏன் கொலை செய்தார் என்று அவர்கள் கூறியுள்ள காரணங்கள் முழுமையானதாக இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

4 மாதப் பழக்கம்
ராம்குமார் சென்னையில் தங்கியிருந்தது 3 மாதங்கள்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் நான்கு மாத காலமாக சுவாதியுடன் அவருக்குப் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

திடீர் தொடர்பு சாத்தியமா?
பேஸ்புக்கில் சுவாதியும், ராம்குமாரும் சாட் செய்து பழக்கமானார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுகுறித்து தெளிவான விளக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை. இருவருக்கும் இடையிலான தொடர்பு திடீரென தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது.

வலுவான காரணம் என்ன?
மேலும் ஒரு நபர் கொலை செய்ய முடிவெடுப்பதற்கு, அதுவும் திட்டமிட்டு செய்வதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அந்த வகையில் சுவாதி தரப்பிலிருந்து ராம்குமாரை இந்த அளவுக்கு கொலை வெறியைத் தூண்டும் அளவுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும்.

சுவாதியை அடித்தவர் யார்?
ராம்குமாருடன் இன்னொருவருக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்துவது போல சுவாதி படுகொலையை நேரில் பார்த்த ஒருவர் அளித்த வாக்குமூலம் இருந்தது. வண்டலூரைச் சேர்ந்த அவர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் கூறுகையில் சம்பவம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு சுவாதியுடன் நல்ல உயரமான ஒருவார் வாக்குமூலத்தில் ஈடுபட்டதாகவும், கன்னத்தில் பளார் என அறைந்ததாகவும், அதற்கு சுவாதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இருவரும் வேறு வேறு
மேலும் கொலை செய்த நபரும், இவரும் ஒருவர் அல்ல. இதை எங்கு வேண்டுமானாலும் நான் வந்து சொல்வேன் எனக்குப் பயம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ராம்குமாருக்கு ஆதரவாக பேச வந்தவரா?
எனவே அடித்த நபரும், ராம்குமாரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களா, நண்பர்களா, அந்த நபர் யார் என்ற கேள்விகள் எழுகின்றன. சுவாதியை அடித்த நபர் ராம்குமாருக்கு ஆதரவாக பேச வந்தவரா அல்லது அடித்த நபருக்கு ஆதரவாக ராம்குமார் பேச வந்தாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆனால் விடைகள் இல்லை.

போலீஸ் தரப்பில் மெளனம்
அடித்த நபர் குறித்து போலீஸ் தரப்பில் எதுவுமே பேச மறுக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சுவாதி குடும்பத்தினரும் கூட கூறுகிறார்கள். இருப்பினும் நடந்தது உண்மைதான், நான் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று வண்டலூர்க்காரர் அடித்துக் கூறுகிறார். இதுவும் குழப்பமாக உள்ளது.
மொத்தத்தில் ராம்குமார் உடல் நலம் சரியாகி வந்து முழுமையாக வாக்குமூலம் அளிக்கும்போதுதான் உண்மைகளும் முழுமையாக வரும் என்பது மட்டும் உறுதி.












Click it and Unblock the Notifications