விஜய் மாநாட்டுக்கு சென்ற மகன் எங்கே? 10 நாட்களாக தேடி அலையும் தந்தை! விஜய் உதவுவாரா?
திருத்துறைப்பூண்டி: கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜய் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற தன் மகன் 10 நாட்கள் கடந்தும் வீடு வந்து சேரவில்லை என்று தந்தை ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கைத் திருவிழா மாநாடு விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. புதியதாக கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் முதல் மாநாடு என்பதால் பாதுகாப்பு வசதிகள் குறித்து தொடக்கத்திலிருந்தே காவல்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். மாநாட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாகவே விழுப்புரம் மாவட்டம் காவல்துறை ஆணையர் சார்பில் 20க்கும் மேற்பட்ட கேள்விகள் வழங்கப்பட்டு உரிய விளக்கம் கேட்டும் பெற்றிருந்தனர்.

காவல்துறையின் இந்தக் கெடுபிடி தொடர்பாகப் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆளும் கட்சி காவல்துறையை வைத்து மறைமுகமாக நெருக்கடி தருவதாகவும் கூறியிருந்தனர். ஆனால், காவல்துறை கணித்ததைப் போலவே மாநாட்டுக்கு மதியம் 3 மணிக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கூட்டம் வந்து குவிந்தது. வாகனங்களை நிறுத்தும் மைதானம் நிரம்பி வழிந்ததால், ஆயிரக் கணக்கான தொண்டர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பின் மாற்று ஏற்பாடு உடனடியாக செய்யப்பட்டது.
சுமார் திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 20கிமீட்டர் தூரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநாட்டுக்கு வரமுடியாமல் சாலையிலேயே பலமணிநேரம் வாகனங்கள் வரிசையில் காத்து கிடந்தன. உடனடியாக காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே மாநாடு மலை 5 மணிக்கு முன்பாகவே தொடங்கியது. அப்படி இருந்தும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் சிலர் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவக் குழு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது.
பல கட்ட முன்னேற்பாடுகள் செய்தும், சாலையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மாநாட்டை நோக்கி வந்த தவெக தொண்டர்கள் 5 பேர் சாலை விபத்தில் பலியாகினர். இதில் கலந்து கொள்வதற்காக வாகனங்களில் பயணம் செய்தபோது தவெக தொண்டர்கள் திருச்சி வழக்கறிஞர் சீனிவாசன், திருச்சி ஜே.கே.விஜய்கலை, சென்னை பாரிமுனையைச் சேர்ந்த வசந்தகுமார் மற்றும் ரியாஸ், செஞ்சி உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அடிப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த தொண்டர்கள் உயிரைத் தியாகம் செய்தபோதும், அவர்களுக்காக மாநாட்டு மேடையிலேயே அஞ்சலி செலுத்தப்படவில்லை என்று பலரும் விமர்சித்த பிறகு, அடுத்த நாள் 28 ஆம் தேதி விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். அறிக்கையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலர் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், விஜய்யின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று தனது மகன் 10 நாட்களாகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று கண்கலங்கிக் கதறிவருகிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் உள்ள கரையங்காடு பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்ற 32 வயது நிரம்பிய இளைஞரும் மாநாட்டுக்கு தங்கள் பகுதி நிர்வாகிகளுடன் விக்கிரவாண்டிக்கு வந்துள்ளார். அவர் மாநாடு முடிந்த பிறகு தங்களின் ஊருக்கு வந்து சேரவில்லை. எனவே அவரது தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர். போனில் பேசிய மேகநாதன், உடனே வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். சில மணி நேரங்களாகியும் அவர் வந்து சேரவில்லை.
காத்திருந்து பார்த்த ஓட்டுநர் பேருந்தை எடுத்துக் கொண்டு தங்கள் குழுவினருடன் பயணித்து விட்டார். மகன் வருவான் என எதிர்பார்த்து காத்திருந்த மேகநாதனின் தந்தை விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகன் மாநாட்டில் பங்கேற்ற புகைப்படத்தையும் அடையாளமாக அளித்துள்ளனர். அப்படி இருந்தும் 10 நாட்களைக் கடந்து இன்னும் தன் மகன் வீடு வந்து சேரவில்லை என்று கதறுகிறார் இந்தத் தந்தை.
இது குறித்து மேகநாதன் தந்தை புஷ்பநாதன், "எங்க சொந்த கிராமம் முத்துப்பேட்டை. திருத்துறைப்பூண்டி பக்கம் எங்கள் கிராமம் இருக்கிறது. மாநாட்டுக்குக் கடந்த மாதம் 26 ஆம் தேதி என் மகன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றான். இதுவரை வீடு வந்து சேரவில்லை. முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தேன். அவர்கள் விக்கிரவாண்டி போகச் சொன்னார்கள். அங்குப் போய் புகாரளித்தேன். இதுவரை அவன் வீடு திரும்பவே இல்லை. எனக்கு ஒரே மகன்தான். அவன் தாய் இல்லாத பிள்ளை. செல்லமாக வளர்த்த மகன் எங்கே போனால் என்றே தெரியவில்லை. எப்படியாவது விஜய்தான் கண்டுபிடித்துத் தர உதவி செய்யவேண்டும்" என்று கண்ணீர் மல்கக் கதறுகிறார் இந்தத் தகப்பன்.












Click it and Unblock the Notifications