டிடிவி தினகரன் வீட்டுக்குள் நுழைந்த அந்த "பிரபலம்".. தலைகீழாக மாறுதே.. கனிகிறது காலம்..அப்ப எடப்பாடி
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வீட்டிற்குள் முக்கிய தலைவர் ஒருவர் சென்றுள்ளார்.. இதையடுத்து, தமிழக அரசியலில் விரைவில் மாற்றங்கள் பல ஏற்படலாம் என்கிறார்கள். என்ன நடந்தது?
சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறாரே தவிர இதுவரை அப்படி ஒரு சந்திப்பை நடத்தவில்லை.. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை..
சாதி முத்திரை: ஆனால், சசிகலா தரப்பில்தான், இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. காரணம், அதிமுக என்ற கட்சி தன்கையில் வந்து சேரும் என்று இப்போது வரை உறுதியாக சசிகலா இருக்கிறார்.. ஒரு கட்சிக்கு பொதுச்செயலாளராக இருக்க வேண்டுமானால், "சாதி முத்திரை" படியாமல், அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவராக விளங்க வேண்டும் என்பதால், ஓபிஸ்ஸை சந்திப்பதில் தயக்கம் காட்டி வருகிறாராம் சசிகலா.. அதனால்தான், ஓபிஎஸ் நடத்திய திருச்சி மாநாட்டில்கூட அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை என்றார்கள்..
இப்போது வரை அப்படியான சந்திப்பு எதுவும் நடக்காத சூழலில் வைத்திலிங்கம் வீட்டில், இதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக அடித்து சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

வைத்தியலிங்கம் அப்செட்: வைத்தியலிங்கத்தை பொறுத்தவரை, முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர்.. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்.. ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.. ஆரம்ப காலத்தில் இருந்து, சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்... சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டாவை சேர்ந்தவர்.. சிறைக்குச் செல்லும் வரை, அவரின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்..
எடப்பாடி பழனிசாமி: ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர்.. அதிமுகவின் 7 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர்.. அதாவது ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர் வைத்தியலிங்கம்.. எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தார்.. ஆனால், 2016 தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வி அடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.
ஜெயலலிதா மறைவு, சசிகலா ஜெயில், ஓபிஎஸ் இரட்டை தலைமை விவகாரம் என அதிமுக பரபரத்தபோது, வைத்திலிங்கம் நிலைமை என்னாக போகிறதோ என்று டெல்டா அதிமுக கவலைப்பட்டது.. ஆனாலும், ஓபிஎஸ் இவரை கைவிடவில்லை.. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்து, டெல்டா அதிமுகவை நிமிர வைத்தார்.. அதேபோல, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எப்படியும் எம்பி பதவி கிடைக்கும் என்று கனவு கண்டார்.. ஆனால், ஓபிஎஸ் மகனுக்கு அந்த வாய்ப்பு சென்றுவிடவும் அப்செட் ஆகிவிட்டார்..
திடீர் சந்திப்பு: எப்ப பார்த்தாலும், கொங்கு மண்டலத்தையே எடப்பாடி பழனிசாமி தாங்கி பிடிக்கவும்தான், டெல்டாக்காரரான வைத்திலிங்கம் கடும் அப்செட்டுக்கு ஆளானார். அதனால், எந்நேரத்திலும் இவர் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.. ஆனால், அப்படி எதுவும் அவர் செய்யவில்லை..
சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் வைத்திலிங்கம் -சசிகலா இருவருமே நேருக்கு நேர் சந்தித்து கொண்டார்கள்.. எதிர்பாராத சந்திப்பாக இது கருதப்பட்டாலும், சசிகலாவுக்கு வைத்திலிங்கம் "வணக்கம்" வைக்க, பதிலுக்கு சசிகலா, கையில் வைத்திருந்த சாக்லேட்டை தந்து வாழ்த்து சொல்லிவிட்டு போனார்.. தன்னை இந்த அளவுக்கு அரசியலில் உயர்த்தி விட்டதே சசிகலாதான் என்பதை வைத்திலிங்கம் இப்போது வரை மறக்கவில்லை..
எனினும், இப்போது ஓபிஎஸ் மீதான விசுவாசத்தை தொடர்ந்து காட்டி வருகிறார் வைத்தியலிங்கம்..இவர் மட்டும் இல்லாவிட்டால், ஓபிஎஸ்ஸின் வியூகங்கள் இந்த அளவுக்கு வந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். அதனால்தான், வைத்திலிங்கத்தை தன்பக்கம் இழுக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று முயன்று கடைசியில் தோற்றே போனதாக தெரிகிறது..
வீட்டில் விசேஷம்: இப்போது விஷயம் என்னவென்றால், இவரது வீட்டில்தான், விசேஷம் நடக்க போகிறது. தஞ்சாவூரில் மகனின் கல்யாணத்தை நடத்த போகிறார் வைத்திலிங்கம்,.. இந்த கல்யாணத்தில், ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் என 3 பேரையும் ஒன்றாக இணைக்க போகிறாராம்.
ஜூன் 7ம் தேதி மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஆகியோர் இந்த விழாவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் வைத்திலிங்கம் ஆசைப்படுகிறாராம்... அந்தவகையில், திருமண மேடையில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றாக மேடையேற்றவும் முடிவு செய்துள்ளாராம்..
வைத்தி அழைப்பு: இதற்காக, அரசியல் தலைவர்கள் பலரையும் அழைத்து கொண்டிருக்கிறார் வைத்தியலிங்கம்.. அந்தவகையில், நேற்றைய தினம் தினகரனை சந்தித்து திருமண பத்திரிகையை தந்து அழைத்துள்ளார் வைத்தி.. இந்த சந்திப்பு மொத்தம் 30 நிமிடங்கள் நீடித்துள்ளது.. அப்போது, வைத்திலிங்கத்திடம், "காதல் திருமணமா? பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமா?" என்றெல்லாம் விசாரித்திருக்கிறார் தினகரன்.
இதனையடுத்து, "சின்னம்மாவுக்கு பத்திரிகை வைத்து விட்டீர்களா? "என்று தினகரன் கேட்டாராம்.. அதற்கு வைத்திலிங்கம், "இன்னும் இல்லை.. இனி தான் வைக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்..
மகன் திருமணம்: தினகரன் சந்திப்பை முடித்துவிட்டு, சசிகலாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் வைத்தியலிங்கம். அப்போது, வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்க நேரம் கேட்டதாக தெரிகிறது.. அநேகமாக இவர்கள் சந்திப்பு ஓரிரு நாளில் நடக்கவிருக்கலாம் என்கிறார்கள்..
ஓபிஎஸ் தலைமையில் தஞ்சையில் நடக்கும் வைத்தியலிங்கம் இல்ல திருமணத்திற்கு சசிகலா வரும்பட்சத்தில் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு நிச்சயம் நடக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தினகரன் + சசிகலா இடையில் இணக்கமான சூழல் சமீபகாலமாக இல்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த திருமணத்தில் சுமூக சூழல் ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
க்ளைமேக்ஸ்: ஆக, 3 பேருமே அந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதால், அதிமுக அரசியல், நாடாளுமன்ற தேர்தலை எந்த வகையில் எதிர்கொள்வது, பாஜக உறவு குறித்தெல்லாம் நிறைய விவாதிப்பார்கள் என்றே கணக்கு போடப்படுகிறது.. அதுமட்டுமல்ல, திருமண விழாவில் எடப்பாடிக்கு எதிரான அரசியலை நிச்சயம் பேசுவார்கள், என்றும், 3 பேரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஆக மொத்தம், ஓபிஎஸ்-சசி-தினகரன் சந்திப்பானது, அதிமுக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால், எடப்பாடி தரப்பில் லேசான கலக்கம் கவ்வி வருகிறதாம்..!!












Click it and Unblock the Notifications