சட்டசபையில் காமன்வெல்த் தீர்மானம்.. யார், யார் என்ன பேசினார்கள்?
சென்னை: சட்டசபையில் நேற்று கொண்டு வரப்பட்ட காமன்வெல்த் மாநாடு தொடர்பான தீர்மானத்தில் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
முக்கியக் கட்சிகளான திமுக, தேமுதிக ஆகியவை தீர்மானத்தை ஆதரித்துப் பேசின.
பிற கட்சித் தலைவர்கள் பேசிய பேச்சுக்கள்...

சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி)
இலங்கை தமிழர் மீது அக்கறை உள்ள தலைவர் என்றால் அது முதல்வ ஜெயலலிதாதான். அவர் எந்த ஒரு செயலையும் இறுதிவரை போராடி வெற்றி பெறுவது அவரது வழக்கம். இலங்கையில் தமிழர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்த சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 4 முறை தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். இலங்கையில் சிங்களர்களை விட தமிழர்கள் சிறப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உள்ள உரிமைகள், சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவராக ஜெயலலிதா இருக்கிறார்.

தமிழர்களை இந்தியா மதிப்பதில்லை
தமிழர்களை இந்தியா மதிப்பதில்லை. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. பேசாத பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். அதாவது பேசாத பிரதமர் என்று நான் குறிப்பிடுவது என்னவென்றால் தமிழக மீனவர் பிரச்சினையிலும், இலங்கை தமிழர் பிரச்சினையிலும் பிரதமர் பேசாமல் இருக்கிறார் என்ற கருத்தைதான் நான் கூறினேன். இந்த தீர்மானத்தை வரவேற்று வழிமொழிகிறேன்.

செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி)
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் ஏன் செல்லவில்லை என்ற காரணத்தை சொல்லவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்வது ஒட்டுமொத்த தமிழர்களின் வேதனையை மிகுதியாக்கும் வகையில் உள்ளது. வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

மனிதநேயம் இல்லாத ராஜபக்சே
இலங்கைக்கு சென்ற ஆஸ்திரேலிய எம்.பி., நியூசிலாந்து எம்.பி. ஆகியோரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இருந்தே இலங்கை அதிபர் ராஜபக்சே மனிதநேயம் இன்றி எப்படி நடந்து கொள்கிறார் என்பதை எல்லோரும் அறிய முடிகிறது. முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்று வழிமொழிகிறேன்.

உ.தணியரசு (கொங்கு இளைஞர் பேரவை)
பயங்கரவாதி ராஜபக்சே நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது அவமானம். மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டால் அதனால் இந்தியாவுக்கு நேர உள்ள பழிச்சொல்லை முன்கூட்டியே தடுப்பதற்காகத்தான் இந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்துள்ளார். இந்த தீர்மானத்தை வரவேற்று வழிமொழிகிறேன்.

கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி)
இலங்கை தமிழர்களுக்காக இந்த சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 4-வது முறையாக தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தமிழர்களின் உணர்வை மதித்து இந்தியா சார்பில் யாரும் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது. இது குறித்து எத்தனை முறை சொல்லியும் காங்கிரஸ் அரசு செவிசாய்க்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)
இந்த தீர்மானத்தை ஆதரித்தும், வரவேற்றும் வழிமொழிகிறேன். காமன்வெல்த் மாநாட்டில் எந்த வகையிலும் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தித்தான் கடந்த முறையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பிரதமருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்வதாக அறிவித்திருப்பது சரி அல்ல. இன்று கூட தமிழ் மீனவர்களின் 35 படகுகளை இலங்கை கைப்பற்றி உள்ளது. இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறப்பட்டுதான் வருகிறது. அப்படிப்பட்ட இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் எந்த வகையிலும் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது.
மாநாட்டை இலங்கை நடத்துவதால் ராஜபக்சேவுக்கு வீட்டோ அதிகாரம் கிடைத்து விடும். தமிழர் பிரச்னையை காமன்வெல்த் மாநாட்டில் பேச முடியாமல் போய் விடும்.

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானத்தை பாராட்டுவதோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி)
காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ளக்கூடாது என்று இந்த அவை ஏற்கனவே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இந்த நிலையில் முந்தைய தீர்மானமே போதுமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.












Click it and Unblock the Notifications