தாது மணல் விவகாரம்தான் ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்டுக்கு காரணமா?
"தி டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு இந்த அதிகாரிகளின் "சஸ்பென்ஷன்" பற்றி எழுதும்போது,"அரசு மேற்கொண்ட நடவடிக் கைக்கு என்ன காரணம் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒருசாரார் கூறும்போது, இந்த இரண்டு அதிகாரிகளும் சில முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சரவையை இருட்டிலே வைத்திருந்தனர் என்கிறார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டில் கனிம வளம் குறித்து அனுப்பிய அறிக்கை முதல் அமைச்சரைக் கோபப்படுத்தி விட்டதாக ஒரு தகவல் கூறுகிறதாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சங்கத்தினர் கூறும்போது, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள "சஸ்பென்ஷன்" நடவடிக்கை அதிகார வர்க்கத்தின் மீது நடத்தப் பட்ட ஒரு தாக்குதல் என்றும், பல முக்கியமான அரசுப் பதவிகள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதால் ஏற்கனவே அதிகார வர்க்கம் நிலை குலைந்துள்ளது என்றும், சில அதிகாரிகளின் பொறுப்பில் பல துறைகள் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
18 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பல மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் நியமனங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம். முக்கியத் துறைகளான கால்நடை வளம், பால் வளம், மீனளம், வணிக வரித் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, சட்டத் துறை, போக்குவரத்துத் துறை போன்றவற்றிற்கு முழு நேரச் செயலாளர்களே இல்லை என்றெல்லாம் "டைம்ஸ் ஆப் இந்தியா"எழுதியுள்ளது.
முக்கியப் பதவி இடங்கள் பலவற்றைப் பல மாதங்களாக நிரப்பாமல் வைத்திருப்பதும், அதிகாரிகள் சிலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை ஒப்படைப்பதும், பல அதிகாரிகளை மாதக் கணக்கில் கட்டாயக் காத்திருப்பில் வைத்திருப்பதும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி, நிர்வாகத்தில் தேக்க நிலையை ஏற்படுத்தாதா?
இந்த நிலையில் இரண்டு மூத்த அதிகாரிகளை அ.தி.மு.க. அரசு என்ன காரணத்திற்காக தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது? அவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் செய்த தவறுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? அவர்கள் தவறு செய்திட ஊக்குவித்துத் தூண்டியவர்கள் யார் யார்?
அவர்கள் மீது அல்லது முதன்மைக் குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை என்பன போன்ற விவரங்களையெல்லாம் வெளிப்படையாக அறிவித்து விட்டால்,
ஊடகங்களும், அரசியல் தளத்திலும் ஒவ்வொருவரும் தன்னிச்சையாகக் கருத்துகளைக் கூறவேண்டிய நிலை ஏற்படாது என்பதால்,
எது எதற்கோ அறிக்கை படித்து, சட்டப் பேரவை நிகழ்வுகளில் சுறுசுறுப்பாக பங்கெடுத்துக் கொள்வதைப் போன்ற மாயையை ஏற்படுத்திட முயற்சிக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதா இது பற்றியும் விளக்கம் அளிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஏன் அரசு நிர்வாகத்திற்கும் நல்லது.












Click it and Unblock the Notifications