தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க மறுத்தது ஏன்? பின்னணி என்ன?
டெல்லி: தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். பேரிடர் மேலாண்மைச் சட்டம் இதில் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டின் தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பாஜக மற்றும் திமுக இடையே வார்த்தை போர் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் தென்மாவட்ட மழை பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் "தேசிய பேரிடர் என்றும் அறிவிக்கும் சிஸ்டமே இல்லை. தேசிய பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது. வேறு எந்த மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்தது கிடையாது.

உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் மழை, வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் என மத்திய அரசு அறிவிக்கவில்லை. எனவே, தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஆனால், மாநில அளவில் எடுத்துக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாநிலப் பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவும்.
மத்திய அரசின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசால் 'மாநிலப் பேரிடர்' என அறிவிக்க இயலுலும். மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசு பேரிடராக அறிவிக்கும் பட்சத்தில் மாநில அரசின் பேரிடர் நிதியில் இருந்து 10 சதவீதத்தை அந்த பேரிடருக்கு பயன்படுத்தவும் மாநில அரசால் முடியும்" என்றார்.
இதனிடையே தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பேரிடரை, மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் படி, "பேரழிவு" என்ற சொல், இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட விபத்தினால் அல்லது அலட்சியத்தால் ஏற்படுவதை குறிக்கும். இயற்கை பேரழிவு என்பது, பூகம்பம், வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி, சுனாமி, நகர்ப்புற வெள்ளம் ஆகியவை அடங்கும். மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு அணு, உயிரியல் மற்றும் இரசாயனம் போன்ற எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படியே பேரிடர் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை தயாரிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகளின் கீழ், பேரிடர் மேலாண்மை ஆணையம் 3 நிலைகளில் நிறுவப்பட்டுள்ளது. தேசிய, மாநில மற்றும் மாவட்டம் ஆகியவை ஆகும்.
முதலாவது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிரதமரின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது, மேலும் அதன் செயல்பாடுகளை நிறைவேற்ற உதவுவதற்காக செயலாளர்களின் தேசிய செயற்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, மாநில அளவில், மாநில முதல்வர் தலைமையில் ஒரு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு மாநில செயற்குழுவின் உதவி உள்ளது. மூன்றாவதாக மாவட்ட அளவில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை தான் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் ஆகும். தேசிய பேரிடர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டவை எவை எவை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் மட்டுமே இதுவரை என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவரும்.












Click it and Unblock the Notifications